சங்கத்தமிழ் பழமொழி நானூறு
40. கற்றவர் எந்நாட்டினும் சிறப்படைவர்
கற்க வேண்டிய நூல்களை மிகுதியும் கற்று அறிந்தவர்களே அறிவுடையவர் ஆவார்கள். அத்தகைய அறிவினை உடையவர்களது புகழானது நாற்றிசைகளினும் சென்று பரவாத நாடே இல்லையாகும் அந்நாடுகள் அவர்களுக்கு வேற்று நாடுகளும் ஆவதில்லை. அவர்களின் சொந்த நாடுகளாகவே அவை விளங்கும். அங்ஙனமானால், அத்தகையோர் செல்லும் வழிக்குக் கட்டுச் சோறு கொண்டு போக வேண்டியது இல்லை அல்லவா!
ஆற்றவும் கற்றவும் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா; தமவேயாம் ஆயினால்
'ஆற்றுணா வேண்டுவ தில்'.
கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் தம்நாடு போலவே மதித்துச் சிறப்பளிக்கும் நாடுகளாகும். 'ஆற்றுணா வேண்டுவது இல்' என்பது பழமொழி. ஆற்றுணா - வழிக்கு உதவும் கட்டுச் சோறு; அது வேண்டாம். எனவே எங்கும் உபசரிக்கப் பெறுவர் என்பதாம்
Ok
ReplyDeletePost a Comment