ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகா)கோட்டைக்கு வெளியே ஆற்றின் மறுகரையில், ஆங்கிலேயப் படைகள் முகாமிட்டு இருந்தன. மே 4, 1799ல் போர் தொடங்கி, நடந்து கொண்டிருந்தது. இந்த சமயத்தில், திப்பு சுல்தானுக்கு துரோகம் செய்ய முற்பட்டான், மீர் சாதிக் என்ற கயவன்.
இவன், திப்புவின் நிதி அமைச்சர். சம்பளப் பட்டுவாடா நடப்பதாகக் கூறி, கோட்டையின் மேற்குப் பகுதியில், பாராவில் இருந்த படை வீரர்களில் பெரும் பாலோரை, வேறு இடத் திற்குச் செல்லும்படி உத்தரவிட்டான் மீர் சாதிக். கோட்டைக் காவலுக்கு வெகு சிலரே எஞ்சியிருந் தனர். இந்தக் தகவலை, ஆங்கிலேயப் படைக்கு அவன் ரகசியமாகத் தெரிவித்தான்.
ஆங்கிலேயர் உடனே விரைந்து வந்து, திடீர் தாக்குதல் நடத்தி, சுலபமாகக் கோட்டைச் சுவரேறி உள்ளே புகுந்து விட்டனர். அப்போது நண்பகல். திப்பு சுல்தான், அரண் மனையில் உணவு அருந்திக் கொண் டிருந்தார். எதிரிகள் கோட்டைக்குள் புகுந்து விட்டனர் என்ற தகவல் தெரிந்ததும், மன்னருக்கான வேறு எத்தகைய ஆடை, ஆபரணங்களும் இன்றி, உருவிய வாளுடன் புறப்பட்டார் திப்பு.
மெய்க் காப்பாளர்களும், விசேஷப் படையினரும், புடை சூழ்ந்து சென்றனர். போர் வெகு நேரம் நீடிக்கவில்லை. எங்கும் பிணக்காடுகள். கண்ட இடமெல்லாம், துண்டம் துண்டமாக மனித உடல்கள். ஊரே மயானமாயிற்று. "திப்பு சுல்தான் எங்கே?' என்று, ஆங்கிலேயே படைகள் சல்லடையிட்டு சலித்தன,
அரண்மனை அந்தப்புரத்திலும் தேடினர். என்ன ஆனார்? புறமுதுகிட்டு ஓடி விட்டாரா? அவர்களுக்கு திகைப்பு. கோட்டையின் வடக்கு மதில் சுவரில் இருக்கும் நீர் வாசல் அருகே, குவியலாகச் சடலங்கள் கிடப்பதாக, வெள்ளையருக்குத் தகவல் வந்தது. அவற்றின் நடுவில், நெஞ்சில் விழுப்புண் ஏந்தி வீழ்ந்து கிடந்தார் மாவீரர் திப்பு சுல்தான்.
- ஜி.ஆளவந்தார் எழுதிய, "மாவீரர் திப்பு சுல்தான்!' நூலிலிருந்து...
Post a Comment