Translate

கருத்து வேறுபாடுகள், எங்கள் நட்பைப் பாதித்ததில்லை

ராஜாஜி, அப்போது கவர்னர் ஜெனரல். ஒரு நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை வந்திருந்தார். ரமணாசிரமத்தில், பாதாள லிங்கேசுவரர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி. கவர்னர் ஜெனரலுக்கான விசேஷ ரயில் வண்டியில் வந்த ராஜாஜி, அதிலேயே, தங்கி இருந்தார். அப் போது ராஜாஜியை சென்று சந்தித்தார் ஈ.வெ.ரா.,

திராவிடர் கழகத்தில் அப்போது பிளவு தலை தூக்கி இருந்த நேரம். மணியம் மையை ஈ.வெ.ரா., திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு செய்தி பரவி வந்தது. அரசியலில் நேர் எதிர் துருவமான ராஜாஜியை ஈ.வெ.ரா., சென்று சந்தித்த பிறகு தான், மணியம்மையை திருமணம் செய்து கொள்ளும் தீர்மானத்துக்கு ஈ.வெ.ரா., வந்தார் என, திராவிடர் கழகத்தில் பலர் சந்தேகப் பட்டனர்; பலர் பகிரங்கமாகக் கேட்கவும் செய்தனர். அண்ணா துரையும் கூட, கோவையில் ஒரு நிகழ்ச்சியில், இந்தப் பிரச்னையை எழுப்பினார். "நான் என் சொந்த விஷயமாகப் பேசினேன்...' என சொல்லி விட்டார் ஈ.வெ.ரா., கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியை நிருபர்கள் சந்தித்து, "ஈ.வெ.ரா.,வை சந்தித்தீர்களே... ஏதேனும் முக்கியத்துவம் உண்டா?' எனக் கேட்டனர்.

"நான் இங்கு குறைந்த நேரம் தான் தங்கி இருந்தேன். பழைய நண்பர்களைக் காணவும், கலந்து பேசவும் இயலவில்லை. நான் ஈ.வெ.ரா.,வை சந்தித்தது பற்றி, சிலர் குழம்பியிருக்கின்றனர். "டில்லிக்கு வருகிறேன்; சந்திக்க வேண்டும்...' என ஈ.வெ.ரா., கடிதம் எழுதியிருந்தார். இந்த பகுதியில், பல்வேறு குழப்பங்கள், அமைதிக் குறைவு, பல சூழ்நிலைகள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் காரணமான ஓர் இயக்கத்தின் தலைவரை நான் எப்படி சந்திக்கலாம்? அது மரபு அல்லவே என சிலர் கேட்கலாம். அது தவறு என்று கூடக் கூறலாம்.

"ஆனால் உண்மை என்ன? நானும், ஈ.வெ.ரா.,வும் பழைய நண்பர்கள். உலகத்தில் எல்லாமே, மாறுதலுக்கு உட்பட்டவை என்பதை இருவருமே உணரும் அளவுக்கு மூத்தவர்கள். பல ஆண்டுகள் நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றினோம். பிறகு, எங்கள் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், இந்த கருத்து வேறுபாடுகள், எங்கள் நட்பைப் பாதித்ததில்லை. எங்களுடைய இந்த நட்பை, மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். "ஈ.வெ.ரா.,வுடன் என்னுடைய சந்திப்பு, மாநில அரசியலைப் பற்றியதோ, அவருடைய இயக்கத்தைப் பற்றியதோ, அவருடைய பொதுப் பணி பற்றியதோ அல்ல; நாங்கள் சில தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசினோம். அவர் சொந்த விஷயங்களைப் பற்றியே என்னுடன் பேச விரும்பினார். இது பற்றிய எல்லா வதந்தி களையும், தவறான ஊகங்களையும் நான் தெளிவாக்க விரும்புகிறேன். இது, இரு பழைய நண்பர்களின் சந்திப்பு. சொந்த விஷயம் பற்றிய கலந்துரையாடல், அவ்வளவு தான்...' என்று கூறினார் ராஜாஜி. இந்த செய்தி, மே 17, 1949 "ஹிந்து' பத்திரிகையில் வெளிவந்துள்ளது. — "நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சிகள்' எனும் நூலிலிருந்து...



Post a Comment

Previous Post Next Post