தலைப்பைப் பார்த்தவுடன், "என்னடா, இவன் செயற்கை நுண்ணறிவைப் பற்றி எழுதினான், இப்போது நாவல் பற்றி எழுதுகிறானே!" என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நான் செயற்கை நுண்ணறிவைப் பற்றி எழுத முடியாமல், அதைத் தவிர்க்கும் நோக்கில் இதை எழுதவில்லை. மாறாக, நான் படித்த ஒரு மிகப்பெரிய வரலாற்று நாவல் என் மனதில், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதால், அதைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் ஆவலில் இதை எழுதியுள்ளேன். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், தயவுசெய்து சுட்டிக்காட்டுங்கள்; நான் மனதார திருத்திக் கொள்கிறேன்.
நம்மிடையே வரலாற்று நாவல்களைப் படிக்கும் ஆவலை எழுப்பிய முழுப் பெருமை திரு. கல்கி அவர்களையே சாரும். சோழர்களின் காலத்தில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டின் அடிப்படையில் சில உண்மை கதாபாத்திரங்களையும் பல கற்பனை கதாபாத்திரங்களையும் ஒன்றிணைத்து, சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய பிரம்மாண்டமான நாவல் பொன்னியின் செல்வன், இன்றுவரை இளைஞர்களிடையே வாசிப்பைத் தூண்டுவதில் வெற்றிகரமாக விளங்குகிறது. இப்படியான அபார எழுத்தின் தன்மைக்கு நாம் முதலில் தலைவணங்க வேண்டும்.
அவரின் பாதம் தொட்டுப் பின்னர் பல சரித்திர நாவலாசிரியர்கள் இன்றுவரை நூற்றுக்கணக்கான நாவல்களை உருவாக்கியுள்ளனர்; மேலும் பல புதுமையான மற்றும் ஆர்வமூட்டும் கதைகளும் தொடர்ந்து நாள்தோறும் வெளிவருகின்றன. இதுபோன்ற நாவல்களால் தமிழின் சரித்திர இலக்கிய மரபு இன்றும் உயிருடன் இருக்கிறது என்பதை நாம் நன்றி உணர்வுடன் கொண்டாட வேண்டும்.
சமீபத்தில் நடந்த ஒரு முக்கியமான ஆன்மிக நிகழ்வு, காஞ்சி அத்தி வரதர் குளத்திலிருந்து வெளியில் வருதல். லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் அத்தி வரதரை தரிசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை விட முக்கியமானது, அத்தி வரதர் ஏன் குளத்தில் மறைக்கப்பட்டார்? அவர் மீண்டும் வெளிவருவதன் பின்னால் என்ன மர்மம் இருக்கிறது? இவை அனைத்தும் இரண்டு ஆயிரம் ஆண்டுகள் அந்தக் கோவிலை ஒட்டிய வரலாற்று சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஏகப்பட்ட கதாபாத்திரங்களுடன் பின்னிப் பிணைத்து, திரு. காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் எழுதிய பிரம்மாண்டமான சரித்திர நாவல் “அத்திமலைத் தேவன்” ஆகும்.
இந்த பிரம்மாண்டமான நாவல் 5 பாகங்களாக வெளிவந்துள்ளது. திடீரென எதிர்பாராத திருப்பங்களும், ஆழ்ந்த வரலாற்று விவரணைகளும் இந்த நாவலை ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அனுபவமாக மாற்றுகின்றன. அவரது எழுத்து திறமையை ஏற்கனவே நான் ‘ரங்க ராட்டினம்’, ‘பஞ்ச நாராயண கோட்டம்’, ‘சங்கதாரா’ போன்ற நாவல்களில் படித்ததால், இதனை படிக்கதான் வேண்டும் என்று ஆறு மாதங்களாக தினமும் ஒன்று அல்லது இரண்டு அத்தியாயங்களை வாசிக்கிறேன். என்ன கதையோட்டம்! என்ன எழுத்தின் வேகம்!
திரு. காலச்சக்கரம் நரசிம்மாவின் மற்ற நாவல்களை வாசித்த அனுபவம், இந்த நாவலின் வேகத்தையும் மெய்யுணர்வுடனும் ஆழமுடனும் சுகமாக வாசிக்க உதவுகிறது. குறிப்பாக அவரது “மயிலங்கி மங்கையின் மரகதப் பெட்டி” நாவல். சின்ன நாவல் தான். அந்த நாவலின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஒரு அத்தியாயத்தில் வரும் கதாபாத்திரங்கள் அடுத்த அத்தியாயத்தில் இருப்பதில்லை! இதில் அடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் எண்ணிக்கை பற்றிய போட்டிகளை நடத்தலாம் அவ்வளவு பேர் வருவார்கள் செல்வார்கள்.
இந்த ‘அத்திமலைத் தேவன்’ நாவல் காஞ்சி அத்தி வரதரைப் பற்றியதென்றாலும் நமது ஒட்டுமொத்த பாரதத்தின் பலவேறு குட்டி குட்டி நாடுகள் முதல் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களும் ஏன் கம்போடியா போன்ற வெளிநாட்டிலிருந்தும் நம் காஞ்சியின் மீது எடுத்த படையெடுப்புகளும் அதனால் ஏற்பட்ட கலாச்சார மாற்றங்களும், பண்பாடும் அது அடைந்த சிதைவுகளும் மிக விரிவாக சொல்லப்பட்டுள்ளது. ‘அத்திமலைத் தேவன்’ நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் மிக நீண்ட வரலாற்றுப் பின்னணியை நன்கு விரிவாக எடுத்துரைக்கிறது.
சென்ற வாரம் நான்காவது பாகத்தின் இறுதி அத்தியாயங்களில் நந்தி கலம்பகம் எப்படி உருவானது என்பதையறிந்த போது, மனதின் ஆழத்தில் ஒரு அதிர்வை உணர்ந்தேன். தமிழுக்காக இரண்டாம் நந்திவர்மன் வீரமரணம் அடைந்தான் என்று நாம் பள்ளியில் படித்த நினைவுகள் மனதிற்கு தோன்றின. ஆனால், அவன் தமிழுக்காக மட்டுமல்ல, அத்திவரதருக்காகவும் உயிர் நீத்தான் என்பதை அறிந்ததும், அந்த உண்மை என்னுள் பாதிப்படைய வைத்தது. நம் வரலாற்று புத்தகங்கள் எவ்வளவு விஷயங்களை தடம் மாற்றுகின்றன என்பதை அறிந்ததும் அந்த இரவு தூக்கம் வராமலேயே கலைந்து போனது.
பல்லவ சாம்ராஜ்யம் சுமார் 800 ஆண்டுகள் சிறப்புடன் வளர்ந்து, பின்னர் வேகமாக வீழ்ந்ததை நான்கு பாகங்களில் படிக்கையில் கண்ணுக்குள் நீரலைகள் எழுந்தன. இதனை படிக்கும் யாருக்கும் இந்த எண்ணம் வரத்தான் செய்யும். அவர்கள் உருவாக்கிய மாபெரும் கோயில்களும் நினைவுச்சின்னங்களும் மாமல்லபுரம் சிற்பங்களும் காலங்களைத் தாண்டி நிலைத்து நிற்கும் பொக்கிஷங்களாக இருக்கின்றன.
இன்று நாமும் அதே தொண்டை மண்டலத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணி பார்த்த போது, நம் முன்னோர்கள் எவ்வளவு பெருமைமிக்க பொக்கிஷங்களை எளிமையாக உருவாக்கி விட்டனர் என்பதும், அதை காப்பாற்றுவதில் நாம் செய்த தவறுகளும் மனதை மிகுந்த வலியுடன் வேதனையுறச் செய்தது.
அர்த்த சாஸ்திரத்தை எழுதிய விஷ்ணு குப்தர் என்கிற சாணக்கியர், அரசியல் பிதாமகர், நம் காஞ்சியில் பாடம் சொல்லித்தரும் ஒரு சாதாரண பிராமணர் குலத்தில் பிறந்தவர் தான் என்று அறிந்தபோது, அந்நாளில் காஞ்சி நகரம் ஞானத்தின் மையமாக இருந்ததற்கான ஓர் உறுதியான ஆதாரமாகவே தோன்றியது. இதனை திரு. காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் எழுத்தில் படிக்கும் போது, அந்த காலத்தின் ஆழமான அறிவும் பெருமையும் நம் கண்முன் காட்சியாக நின்றது.
அவர் இந்த நாவலை உருவாக்குவதற்காக ஏகப்பட்ட சரித்திர ஆதாரங்களை சேர்த்து அவைகளை கோர்வையாக்கி நல்ல நாவலாக உருவாக்கி, கதையின் வேகத்தை சமநிலையில் வைத்துக்கொள்வதற்காக எடிட்டிங்கிலும் மிகுந்த மெனக்கெட்டுள்ளார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு அரசர் அறிமுகமாகி, சில அத்தியாயங்களில் அவரின் வாழ்நாள் சாதனைகள் முடிந்து விடுகின்றன. அறுபது எழுபது ஆண்டுகால அவரின் வாழ்வு இரண்டு அல்லது மூன்று அத்தியாயங்களில் முடித்திருப்பது நாவலின் ஒட்டு மொத்த வேகத்தை கூட்டுகிறது.
நாவலின் முக்கியமான வரலாற்றுப் புள்ளிகளுக்கு மட்டும் குறிப்பாக அதிக அத்தியாயங்களை ஒதுக்கியுள்ளார். சாணக்கியர், சந்திரகுப்தர், அசோகர், பிரக்ஞதாரா, ஜெயவர்மன் எனும் போதிதர்மர், கரிகாலன், இளந்திரையன் ஆகியவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், காஞ்சியில் களப்பிரர்களின் ஆட்சி, 200 ஆண்டு கால வரலாற்றை இரண்டே அத்தியாயங்களில் முடித்து அவற்றுக்கு வரலாற்று சான்றுகளே இல்லையென்பதை சொல்லாமல் உணர்த்துகிறார்.
இந்த நாவல் துரிதமான கதையோட்டத்தை விரும்பும் வாசகர்களுக்கும், ஆழமான வரலாற்று விபரங்களை ஆராய்வதற்காக தேடுபவர்களுக்கும் சமமான மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அத்திமலைத் தேவன் போன்ற பெரிய படைப்புகளை வாசிக்கும்போது, வாசகராக நாமும் ஒரு காலத்தின் பயணத்தில் கலந்து கொண்டு வரலாற்றின் நிகழ்வுகளை நேரடியாக அனுபவிக்கிறோம் என்பதே உண்மை!
அத்திவரதருக்குப் பின் இவ்வளவு சரித்திர நிகழ்வுகள் புதைந்து கிடக்கிறதா என்று கேள்வி எழாமல் இருக்க முடியாது. திரு. காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் நம்மை மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைகள், கலாச்சார செறிவு, கலை வளர்ச்சி, அறிவின் உயர்வு போன்றவற்றின் சிகரத்தைச் சென்று தொடச் செய்கிறார்.
இந்த நாவல், ஜெயமோகன் அவர்களின் வெண்முரசைப் போல் ஒரு மிகப்பெரிய நூலாக வந்திருக்க வேண்டியது. ஆனால், திரு. நரசிம்மா அவர்கள் இந்த நாவலின் கதையோட்டம் வேகமாக செல்லவேண்டும் என்பதற்காக பல பகுதிகளை சுருக்கமாக புரியும்படி அமைத்து இருக்கிறார். ஆனால் நம்முடைய இந்த மன வேண்டுதலை பூர்த்தி செய்யும்விதமாக ஒரு மிகப்பெரிய வரலாற்று நாவலை அதுவும் காஷ்மீரின் பல நூற்றாண்டு சம்பவங்களை எழுதிக்கொண்டிருப்பதாக தன்னுடைய முகநூலில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல் நபராக வரவேற்கிறேன்.
இந்த ‘அத்திமலைத் தேவன்’ நாவலை படிக்கும்போது, நம் முன்னோர்கள் எவ்வளவு மாபெரும் சாதனைகள் செய்து காட்டினார்கள் என்பதை உணர்வதோடு, அவர்களின் அறிவு, கலைச்சிறப்பு மற்றும் கலாச்சார செழுமையை எண்ணி நாம் காலரைத் தூக்கி கொள்ளத் தோன்றும். இதனை நாவல் என்று பார்த்தாலும் சரி வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு என்று பார்த்தாலும் சரி ஒவ்வொரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
வாழ்க பல்லவம்! வாழ்க தமிழரின் பெருமை!
-S.B.
Post a Comment