Translate

போகி - தீய குணங்களை போக்குவோம்

 போகி - தீய குணங்களை போக்குவோம்

பழையன கழிந்திடட்டும் புதியன புகுந்திடட்டும் .
அழுக்குகள் அகன்றிடட்டும் அன்பு மலர்ந்திடட்டும்!
கோபத்தை கொளுத்திடுவோம் .
குரோதத்தை வேரறுப்போம்.

பொறாமையை புதைத்திடுவோம்.
பேராசை தணித்திடுவோம்!
சுயநலத்தை சுட்டெரிப்போம்.
சோம்பலை தூக்கி எறிவோம்.

வஞ்சகத்தை வதைத்திடுவோம்.
வன்மத்தை மறந்திடுவோம்!
பொய்மையை போக்கிடுவோம்.
புறங்கூறல் ஒழித்திடுவோம்.

கயமையை களைந்திடுவோம்.
கபடத்தை கரைத்திடுவோம்!
அகந்தையை அழித்திடுவோம்..
அநீதியை ஒழித்திடுவோம்

பிறர்பழியை பேசிடாமல்
பெருமையுடன் வாழ்ந்திடுவோம்!
காழ்ப்புணர்வை கரைத்திடுவோம்.
கடுஞ்சொல்லை மறந்திடுவோம்.

ஏமாற்றும் எண்ணங்களை
எரித்து சாம்பலாக்கிடுவோம்!
துரோகத்தை துடைத்திடுவோம்.
துன்பத்தை துரத்திடுவோம்.

மோசடியை முடித்திடுவோம்.
மோகத்தை அடக்கிடுவோம்!
மனக்கறை மறைந்திடட்டும்.
மகிழ்ச்சியே மலர்ந்திடட்டும்.

நல்லெண்ணம் நிறைந்திடட்டும்
நன்மையே நிலைத்திடட்டும்!
தன்னம்பிக்கை தழைத்திடட்டும்.
தயாளமே தலைப்படட்டும்.

கருணையே கரம்பிடித்து
கனிவுடன் வழிநடத்தட்டும்!
போகியிலே பொங்கிடட்டும்.
புது வாழ்வு பிறந்திடட்டும்.

தூய்மையே துலங்கிடட்டும்.
தொல்லைகள் விலகிடட்டும்!
அன்பு மட்டும் நிலைத்திடட்டும்.
ஆனந்தம் பொங்கிடட்டும்.

இன்பமே எங்கும் நிறைந்து
இனிமையாய் வாழ்ந்திடுவோம்!

நேர்மையே நெஞ்சில் நிறைந்து
நேசமே நித்தம் பொங்கி
சேவையே சிறந்த செல்வம்
சீருடன் வாழ்ந்திடுவோம்!


Post a Comment

Previous Post Next Post