முதலில், நம் கணினி எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இதன் இதயமாக செயல்படுவது அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Operating System) என்ற சாப்ட்வேர். எவ்வளவு பெரிய சிறிய Hardware இருந்தாலும் இந்த இயங்குதளம் தான் அதனை இயக்குகிறது. விண்டோஸ் கணினிகள், ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் மற்றும் லினக்ஸ் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் அதன் செயல்பாட்டுக்கும் அடிப்படையாக இந்த OSயே இருக்கின்றது. கணினி இயக்கத்துக்கு அடிப்படையாக இருக்கும் இந்த சாப்ட்வேர்கள், பல்வேறு நிறுவனங்களால் வெகுகாலம் வடிவமைக்கப்பட்டு, காலத்திற்கேற்ப மேம்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய புதிய தொழில்நுட்பங்களுடன் இணைந்த இந்த சாப்ட்வேர்கள், இன்னமும் உருவாக்கப்பட்டு மெருகேற்றிக் கொண்டிருக்கின்றன.
இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் கணினியின் ஆரம்பத்திலிருந்து அதன் செயல்பாடு வரை (ஒரே வார்த்தையில் on - off) ஒவ்வொன்றையும் செயல் பட வைக்கின்றது.
தொடக்க காலங்களில், தனி நபர் கணினி இயக்கத்திற்குப் பயன்படுத்திய முறை டிஸ்க் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Disk Operating System), அதாவது DOS ஆகும். 70 மற்றும் 80களில், DOS கணினி உலகின் முதன்மை இயக்கமாக திகழ்ந்தது. அந்த காலத்தில் ஒரு பெரிய Floppy Disk டிஸ்க் (8, 5.15, 3.5 இன்ச் என மூன்று வகையில் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை), மூலம் கணினிகளை இயக்குவது மட்டுமே சாத்தியமாக இருந்தது. அந்த Floppyகளை மிக பத்திரமாக Magnet இல்லாத இடமாக பார்த்து வைக்க வேண்டும். காந்த வீச்சு அதனுள் உள்ள டேட்டாக்களை அழித்து விடும். இந்த DOSக்கு முன்னரே Unix என்ற இயங்குமுறை 1969லிருந்து பயன்படுத்தப் பட்டிருந்தாலும் தனி நபருக்கு அவ்வளவு எளிதாக உகந்ததாக இருக்கவில்லை.
பின்னர், டெக்னாலஜி வளர்ச்சியுடன், DOS மற்றும் UNIXலிருந்து பல முன்னேற்றங்கள், பல பிரிவுகள் என உருவாகின. UNIX இல் இருந்து தனி நபர் பயன்படுத்தவென்று Machintosh (தற்போதைய ஆப்பிள் os) Solaris, மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் சொந்த இயங்குதளங்களை வடிவமைத்தன. காலப்போக்கில் சில காணாமலும் சென்றன. இதில் DOSஐ அடிப்படையாக கொண்டு பயனர்களுக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டு கணினி உலகில் மாற்றத்தை ஏற்படுத்தியதும், இதுவரை நம்பர் ஒன்னாக திகழ்வதும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எனும் இயங்குதளம் தான்.
விண்டோஸ் அதன் தனித்துவமான, எளிமையாக பயன்படுத்தும் நேர்த்தியாலும், தகுதிகளாலும், மொத்த உலகின் ஏன், பெரும்பாலான கணினிகளின் இதயமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இயங்குதளமாக திகழ்கிறது. இதன் பயணம் மற்றும் வளர்ச்சி நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். தற்போது செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி Co-pilot என்கின்ற தனக்கென உருவாக்கிய AIயை os உடன் இணைத்து புரட்சி செய்கின்றது.
இதே போன்று ஆப்பிள் நிறுவனம் அது முதன்முதலில் Macintosh OS-ஐ வெளியிட்டது, இது தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் முன்னோடியான வசதிகளுடன் அறிமுகமாகியது. UNIXன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருந்த இந்த os அவர்களிடம் வாங்கும் கம்ப்யூட்டர்களுக்கு மட்டும் என வெளியிட்டார்கள். இன்னமும் இப்படித்தான் இருக்கிறது. அவர்களின் Hardware க்கு மட்டும்தான் இது செயல்படும்.
இதனைத் தொடர்ந்து, பல நிறுவனங்கள் தங்கள் சொந்த இயங்குதளங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தன. ஆனால், இவை அனைத்தும் கட்டணத்திற்குட்பட்டவை என்பதால், பொதுமக்கள் அனைவருக்கும் அவற்றை அணுகுவது சற்றே கடினமாக இருந்தது.
கட்டணமின்றி ஏன் இதனை இயக்கக்கூடாது என்று யோசித்த சிலர், இதற்கு மாற்றாக, இலவச மற்றும் திறந்த மென்பொருள் கொள்கையை ஆதரித்து ஒரு குழுவாக மாறினர். இதன் மூலம் அறிமுகமானது தான் ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் (Open Source Software) எனப்படும் கொள்கை. ஒவ்வொரு Paid appsக்கும் ஒரு open Source app இருக்கும். அவர்களின் முக்கிய சாதனையாக, லினக்ஸ் (Linux) OS உருவானது. லினக்ஸ் ஒரு திறந்த மூல அமைப்பாக இருந்து, அனைவருக்கும் இலவசமாக பயன்படுவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், அதன் ஆரம்ப காலங்களில், லினக்ஸ் பயனர்களுக்கு எளிமையானது அல்ல. கட்டளைகளின் அடிப்படையில் (Command-line interface) இயங்கிய இதை பயன்படுத்த, தொழில்நுட்ப அறிவு தேவைப்பட்டது. தற்போது, GUI (Graphical User Interface) அறிமுகமாகியதால் அதாவது மைக்ரோ சாப்டின் விண்டோஸ் போன்று தனது வடிவமைப்பினை மாற்றி லினக்ஸ் பயன்பாட்டை எளிமையாக்கி, அனைத்து தரப்பினரும் அதை அனுகக்கூடிய வகையில் மாற்றியுள்ளனர்.
இன்று, லினக்ஸ் அதன் பல்துறை பயன்பாடுகள் மற்றும் தனிப்பட்ட தேவைகேற்ப OSஐ உருவாக்குவதன் மூலம் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்றும் மிகப்பெரிய சர்வர் நெட்வொர்க்குகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துவது இதைத்தான். முற்றிலும் இலவசம் என்பது மட்டுமல்ல, தனிப்பயனுக்கு உகந்த அமைப்புகளையும் தேவைகளையும் உருவாக்கி இது ஒரு முக்கியமான Open Source இயக்கமாகத் திகழ்கிறது.
லினக்ஸ் இயங்குத் தளத்தில், பல்வேறு டிஸ்ட்ரிப்யூஷன்கள் (Distributions) உருவாகி நமக்கு ஏகப்பட்ட தேர்வுகளை வழங்குகின்றன. இதில், Debian, Red Hat, open Suse, Fedora, Ubuntu ஏன் நமது இந்திய அரசும் Bharat os (Boss) போன்ற பிரபலமான distributions முன்னணி வகிக்கின்றன. ஒவ்வொரு வகையும் அதற்கென தனித்துவமான அம்சங்கள், educationக்கு என்று தனியாக os, பயன்பாட்டு எளிமைகள், மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன், ஒன்றுடன் ஒன்று போட்டியிடுகின்றன. இது அனைத்துமே இலவசம் என்பது மட்டுமல்ல நம் கணினியில் எளிதாக நிறுவிப் பயன்படுத்தலாம்.
அனுபவமில்லாத சாதாரண பயனாளர்களிலிருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வரை அனைவருக்கும் ஏற்ப சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், லினக்ஸ் இன்று சாதாரண பயனர்களுக்கான கணினிகளில் மட்டுமின்றி, பெரிய பெரிய சர்வர்கள் மற்றும் தகவல் காப்பகங்கள் வரை செயல்படுவதற்கான நம்பகமான OSஆகத் திகழ்கிறது.
இவை, கணினி உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியதோடு, தொழில்துறையின் பல அடித்தள கட்டமைப்புகளுக்கு ஆதாரமாகவும் திகழ்கின்றன.
கணினி உலகில், மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்திற்கு ஒரு முக்கிய எதிரி என்றால், அது (Virus) வைரஸ் மற்றும் ட்ரோஜன்கள் (Trojan) எனப்படும் மின்னணு தொல்லைகளே! வைரஸ்கள் என்பது சிறியதொரு கண்ணுக்கு தெரியாத application, அதனால் தான் வைரஸ் என்று பெயர் வைத்தார்களோ, அவை கணினியின் இயங்குதளத்தை சிதைத்து, செயல்திறனை முற்றிலும் பாதித்து கணினியை நிறுத்தக்கூடிய வலிமையுடையவை.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எளிதாக Third-party applications-ஐ நிறுவ அனுமதிப்பதால், வைரஸ்கள் மற்றும் தீங்கான மென்பொருட்களுக்கு வழி ஏற்படுத்தி விடுகிறது.
ஆனால், இதற்கு மாறாக, ஆப்பிளின் macOS மற்றும் லினக்ஸ் OS இந்த தொல்லைகளுக்கு மிகவும் பாதுகாப்பானவை. ஏனெனில், இவை Third-party apps-ஐ எளிதாக நிறுவ அனுமதிக்காது. மேலும் இயங்குதளத்தின் மையப்புள்ளியான Kernel Structureஐ தொடக்கூட அனுமதிப்பதில்லை.
சரி ரொம்ப நீளமா போய்க்கிட்டிருக்க தலைப்புக்கு வா என்கிறீர்கள் புரிகிறது. இதோ...
பழைய கணினி அல்லது லேப்டாப்—எதுவாயினும், விண்டோஸ் அல்லது ஆப்பிள் OS போன்ற அப்டேட் செய்ய முடியாத படி இயங்கினால், இன்றைய தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப வந்துள்ள நவீன Apps-ஐ உபயோகிக்க முடியாது. இதனால், எந்த செயல்களும் சீராக இயங்காது, முற்றிலும் செயலிழந்து போகலாம்.
நவீன Apps வேலை செய்ய முடியாத நிலைக்கு காரணம் நம் கணினியில் உள்ள பழைய ஹார்ட்வேர் என்பதே. இதன் விளைவாக, கணினி வேகம் குறைந்து, தொங்கும் நிலையை அடைகிறது, அதன் செயல்பாடு சீர்குலைகிறது.
இதற்கு என்ன செய்யலாம்?
நம்மிடம் உள்ள கணினியின் ஹார்ட்வேரினை மேம்படுத்தலாம். இது RAM மற்றும் Harddisk SSD என மாற்றி கொஞ்சம் வேகப்படுத்தலாம். அதுவும் முடியாத பட்சத்தில் வேறு ஒரு os க்கு அதாவது விண்டோஸ் என்றால் லினக்ஸ்க்கு மாற்றிப் பார்க்கலாம்.
பழைய கணினியை எவ்வளவு மேம்படுத்தினாலும், அதற்கான உச்சவரம்பு என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும்.
உங்கள் பழைய கணினிக்குப் புத்துயிர் கொடுப்பதற்கான மேற்கண்ட வழிகளைப் பயன்படுத்தி, நவீன Apps மற்றும் தொழில்நுட்ப தேவைகளுக்குச் சரிசெய்யலாம். அப்படியும் முடியவில்லையென்றால் மற்றும் ஒரு முயற்சியாக புதிய Webosக்கு மாற்றி பார்க்கலாம். அப்படிப்பட்ட ஒன்று தான் கூகுளின் Chrome OS. (அப்பாடா Subjectக்கு வந்தாச்சு)
Chrome OS - முற்றிலும் இலவசமாக லினக்ஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்ட Webos. முதலில் அவர்களுக்கென உருவாக்கப்பட்ட கணினியில் தான் இதனை நிறுவும்படி இருந்தது. இப்பொழுது அப்படியல்ல எதுவாயினும் install செய்து பயன்படுத்தலாம். அதைப் பற்றி பார்ப்போமா...
Google Chrome OS என்பது, Google Chromeஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு இயக்க முறைமையாகும். முழு வேலையும் கூகுள் குரோமை ஒட்டியே இருக்கும். இது, குறைந்த திறன் கொண்ட பழைய கணினிகளுக்கு புத்துயிர் கொடுக்கவும், அவற்றின் பயன்பாட்டை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக விண்டோஸ் மற்றும் ஆப்பிள் கணினிகள் உடனான வேலைகளை எளிமையாக்குவதற்கும் உகந்தது. 2023ல் வெளியிட்ட வெளியிடு ஒன்று தான் இந்த Chrome OS Flex.
Chrome OS Flexன் சிறப்பு என்ன என்று கேட்கிறீர்களா?
Chrome OS Flex மிக எளிமையான Web-first Architecture கொண்டுள்ளது. Chrome OS Flex இயக்குவதற்கு பெரிய ஹார்ட்வேர் தேவையில்லை. இதனால் பழைய கணினிகளிலும்இதனை இயக்க முடியும். குறைந்தபட்ச RAM (4GB அல்லது அதற்கு குறைவாக இருந்தாலும்), பழைய ஹார்ட்டிஸ்க் டிரைவ், மற்றும் மெதுவான சிபியூ (Dual Core Processor இருந்தாலும்) போன்றவை கூட இதை ஆதரிக்கின்றன.
Chrome OS Flex முழுக்க முழுக்க கிளவுட் (தமிழில் மேகக் கணினி என்றும் கூறலாம்) அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. கண்டிப்பாக Internet இதற்கு அவசியம். இதன் மூலம், உங்கள் pdf, doc, Apps, மற்றும் தகவல்கள் அனைத்தும் கிளவுட் சேமிப்பகத்திலேயே அதாவது கூகுள் டிரைவில் இருக்கும். ஆனால் அதற்கும் ஒரு லிமிட் உள்ளது.
Googleன் முழுச் சேவைகளை முழுமையாக பயன்படுத்த முடியும். Android Smart Phoneல் நாம் என்னவெல்லாம் இன்ஸ்டால் செய்ய முடியுமோ எல்லாவற்றையும் இதிலும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும்.
Chrome OS Flex, வைரஸ்கள் மற்றும் மால்வேர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பானது. Sandboxing மற்றும் Verified Boot எனப்படும் பாதுகாப்பு முறைகள் இணைந்து, ஒவ்வொரு இன்ஸ்டான்ஸும் பாதுகாப்பாக இருக்கும். கணினி மீதான Automatic Updates மூலம், உங்கள் OS உடனுக்குடன் பாதுகாப்புடன் புதுப்பிக்கப்படும்.
பெரிதான சாதாரண வேலைகளுக்கு சிறந்தது Chrome OS Flex, வெப் பிரவுசிங், வார்ட் உருவாக்கம், இசை, YouTube பார்த்தல், மற்றும் Social apps பயன்பாட்டிற்கு சிறந்தது. கடினமான கிராஃபிக்ஸ் அல்லது உயர் செயல்திறன் தேவைப்படும் செயல்பாடுகளுக்குத் தேவைப்படும் கணினி அல்ல. அதாவது பெரிய அளவில் வீடியோ எடிட்டிங் கிராபிக்ஸ் போன்ற செயல்களுக்கானது அல்ல.
Google Chrome os 400 க்கும் மேற்பட்ட பழைய சாதனங்களின் ஹார்டுவேர்கள் Chrome OS Flex மூலம் இயங்கும் வகையில் சோதித்து அங்கீகரித்துள்ளது.
Chrome OS Flex-ஐ உங்கள் கணினியில் நிறுவுவது மிகவும் எளிமையானது.
உங்கள் கணினியில் Chrome OS Flex-ஐ நிறுவி, அதனை புதிய Chromebook ஆக மாற்றவும். பயனற்று இருக்கும் உங்கள் கணினிக்கு உயிர் கொடுங்கள். பயன் பெறுங்கள்.
Chrome OS Flex பெறுவதற்கான லிங்க்.... https://chromeos.google/products/chromeos-flex/
Post a Comment