Translate

AI-யிடம் சரியான கேள்விகளை கேட்பது எப்படி? சக்திவாய்ந்த Prompting கலை

மொழி மாதிரிகளின் உலகம் ஓர் ஆழமான பெருங்கடல் போன்றது. கடந்த சில மாதங்களாக நாம் இந்த துறையின் பல்வேறு பரிமாணங்களையும், அவற்றின் பயன்பாடுகளையும் ஆராய்ந்து வந்துள்ளோம். ஆனால் இவை அனைத்தும் இந்தப் பெருங்கடலின் மேற்பரப்பில் மிதக்கும் ஒரு சிறு முத்துவைப் போன்றவையே.

இந்த துறையின் வளர்ச்சியும், அதன் சாத்தியக்கூறுகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்புகளும், முன்னேற்றங்களும் வெளிவருகின்றன. இந்த வளர்ச்சிப் பாதையில் நாம் இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறோம் என்பதே உண்மை.

மொழி மாதிரிகள் (Language Models) என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. உதாரணத்திற்கு நாம் ஒரு கட்டுரை எழுத விரும்புகிறோம், அதற்கான  தகவல்களை பல்வேறு புத்தகங்கள் மற்றும் ஆதாரங்களிலிருந்து சேகரிக்க வேண்டும். அந்த தகவல்களைப் படித்து, புரிந்து, பாயிண்ட் பாயிண்டாக எழுதி, பின்னர் அதனை ஒருங்கிணைத்து ஒரு நல்ல கட்டுரையாக உருவாக்க வேண்டும். இதற்கு வெகு காலம் பிடிக்கும். சில நேரங்களில், இது நாட்களாகவோ மாதங்களாகவோ கூட நீண்டு செல்லும்.

ஆனால், இந்த அதிநவீன மொழி மாதிரிகளால், நம்முடைய தேடலுக்கு பொருத்தமான தகவல்களை ஒருங்கிணைத்து, அதற்குரிய வலைப்பக்கங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை உடனடியாக வழங்கி நம்முடைய நேரத்தைச் சேமிக்க முடிகிறது. இதுவே இந்த தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய பலமாகும்.

மொழி மாதிரிகள் நம் கேள்விகளின் அடிப்படையில் பதில்களை உருவாக்குகின்றன. இதனால், நம்முடைய கேள்விகள் தெளிவாகவும் தொடர்புடையதாகவும் இருந்தால், நமக்கு கிடைக்கும் பதில்கள் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

எனவே, சரியான கேள்விகளை வடிவமைக்க நாம் சில அடிப்படைகளை மனதில் கொள்ள வேண்டும். இது நம் நேரத்தை மிச்சப்படுத்தி நம் திறமையையும் அதிகரிக்க உதவும் சிறந்த முறை என்பதில் சந்தேகமே இல்லை.


Gemini, ChatGPT போன்ற மொழி மாதிரிகள் வெறும் மெஷின்கள் மூலம் செயல்படுபவை என்று எண்ணி அவற்றை எளிதாக கருத வேண்டாம். இப்பொழுது, இந்த மொழி மாதிரிகள் மனிதர்களை விட வேகமாகவும், துல்லியமாகவும் சிந்திக்கத் தொடங்கிவிட்டன. அவை நம் கேள்விகளுக்கு உடனடி மற்றும் விரிவான பதில்களை வழங்குகின்றன.

நாம், AI சொல்லும் கதைகள் (AI-Generated Stories) என்ற ஒரு வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இதில், முழுவதும் மொழி மாதிரிகளின் மூலம் உருவாக்கப்படும் கதைகளை வெளியிடுகிறோம். சின்ன கதை ஆனால் கருத்துக்கள் மிக அற்புதம். இந்தக் கதையின் வடிவமைப்பில், மொழி மாதிரிகள் அசாதாரணமான கற்பனைக்கு அப்பால் கதாபாத்திரங்களின் ஆழமான உணர்ச்சிகளை வெளிபடுத்தி மனித சிந்தனையை மிஞ்சும் வகையில் அமைந்தன. நம் கற்பனைக்கு அழகான வடிவம் கொடுத்து நமக்கு நல்ல கதைகளை உருவாக்க உதவுகிறது.

மொழி மாதிரிகளை (AI language models) பயன்படுத்தும்போது, நம் கேள்வியின் துல்லியமும் அதற்கான விளக்கமும் நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய உதவுகின்றன. உதாரணமாக, "வேள்பாரி" பற்றி ஒரு கதை சொல்லுங்கள் என்று சுருக்கமாகக் கேட்டால், Claude போன்ற AI மாடல்கள் தற்காலத்தில் வேள்பாரி என்ற பெயருள்ள ஒருவனை கற்பனை செய்து, ஒருவேளை ஒரு ஆட்டோ டிரைவராகவோ அல்லது ஒரு கலைஞனாகவோ கதை உருவாக்கி தரலாம்.

ஆனால் அதே கேள்வியை, "சங்ககால வேள்பாரி பற்றி ஒரு கதை கூறுங்கள்" என்று கொடுத்தால், அது சங்ககாலத்தை மையமாகக் கொண்டு பறம்புமலை மன்னன் வேள்பாரியின் வாழ்க்கை மற்றும் கதைகளை வடிவமைத்துத் தரும். மேலும், இதையே இன்னும் சிறப்பாக வடிவமைக்க, நமது கேள்வியை துல்லியமாக விரிவுபடுத்தலாம், உதாரணத்திற்கு

"சங்ககாலப் பாடல்களில் உள்ள குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, செழுமையான விவரிப்புகள் மற்றும் தனித்துவமான உரையாடல்களுடன் கூடிய வேள்பாரியின் கதையை உருவாக்குங்கள்."  என்று நாம் கேட்டால், AI மாடலில் ஏற்கனவே உள்ளிடப்பட்ட சங்ககாலக் குறிப்புகளைப் பயன்படுத்தி, கதையை செழுமையாகவும் விறுவிறுப்பாகவும் உருவாக்கும். இதுதான் Good Prompting எனப்படும் சரியான கேள்வி வடிவமைப்பின் முக்கியத்துவம்.

நம் கேள்விகளை சரியான முறையில் அமைக்கும்போது, மொழி மாதிரிகளின் திறன் அதன் உச்சத்தில் செயல்படும். நமக்கு தேவையான தகவல் அல்லது பதிலை பெற, நம்முடைய கேள்விகளை தெளிவாகவும் விளக்கமாகவும் அமைக்க வேண்டும். கேள்வியில் கூடுதல் விவரங்களை சேர்ப்பதன் மூலம், AI மொழி மாதிரிகள் நம் எதிர்பார்ப்பை முழுமையாக புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் சிறப்பான பதில்களை வழங்கும்.

இதைச் சிறப்பாக புரிந்து கொள்ள மற்றுமொரு சாதாரன உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

நம்மை தக்காளி வாங்கி வர வீட்டில் அனுப்புகிறார்கள். மார்கெட்டுக்குப் போய், அங்கே தக்காளி இருக்கிறது என்பதை பார்த்து வாங்கி வருகிறோம். ஆனால், வீட்டிற்கு வந்தவுடன், "உங்களுக்கு தக்காளி கூட வாங்கத் தெரியல, நாட்டுத் தக்காளிக்குப் பதிலாக பெங்களூர் தக்காளி வாங்கி வந்திருக்கீங்க!" என்று திட்டுவார்கள்.

இதற்குப் பின்னர், தக்காளியில் பெங்களூர் தக்காளி என்பதையும் நாட்டுத் தக்காளி என்பதையும் நாம் ஒரு நிமிடம் யோசிக்கிறோம். உண்மையில், இவ்விரண்டுக்கும் உள்ள வித்தியாசம் நமக்குத் தெரிந்தால் மட்டுமே, அடுத்த முறை தேவைக்கேற்ப சரியான தக்காளியை வாங்கி வர முடியும்.

இதற்கு பதிலாக "தக்காளித் தொக்கு செய்ய போறோம், நல்ல நாட்டுத் தக்காளியா பார்த்து வாங்குங்க" என்று வீட்டில் கூறினால், நாம் எந்த ஒரு தவறும் இல்லாமல் சரியானதை வாங்கி வர உதவும், நமக்கும் எந்த திட்டும் இருக்காது. இதுவே prompting-இன் முக்கியமான தேவைக்கேற்ற விஷயத்தைச் சரியாக கேட்பது.

நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, Prompting என்பது எதிர்காலத்தில் முக்கியமான திறனாக மாறும். நவீன தொழில்நுட்ப உலகில், மொழி மாதிரிகளுடன் வேலை செய்ய சரியான கேள்விகளை வடிவமைக்க தெரிந்துகொள்ளுதல் மிகவும் அவசியம். இதற்காக கல்வி முறையில் கட்டாயமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். நமக்குத் தேவைபட்ட தகவல்களைப் பெறுவதற்கான திறனை வளர்ப்பது, அதற்குரிய கேள்விகளை எப்படி கேட்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது மூலம் தான் சாத்தியம்.

-S.B.

Post a Comment

Previous Post Next Post