தேசிய உணர்ச்சியை வெளிக்காட்ட, உணர்ச்சிமயமான சின்னங்களை அரசு பயன்படுத்துகிறது. மக்களுக்கு தேசிய உணர்ச்சியை உண்டாக்க, சின்னங்கள் பயன்படுகின்றன.
சில நாடுகள், தங்களது தேசிய சின்னமாகப் பறவைகள் அல்லது விலங்குகளை வைத்துள்ளன. இது, பழமையான சம்பிரதாயம். ஆதி கால மக்கள் கேடு செய்யும் பிசாசுகளை ஓட்டவும், அதிர்ஷ்டம் உண்டாக்கவும் ஒரு குறிப்பிட்ட பறவை அல்லது விலங்கைத் தேர்ந்தெடுத்தனர். ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தப் பழக்கம் இருந்து வருகிறது.
பருந்து - சில சமயங்களில் இரண்டு தலைகளை உடைய பருந்து, தேசிய சின்னமாகப் பயன்படுத்தப்படுகிறது. புராதன ரோமானியப் படையினர் அவர்களது கொடிகளில் உருவத்தை வரைந்திருந்தனர். நெப்போலியன் பரபரப்பான சாதனைகளை அறிவிக்கும் பிரகடனங்களிலும், இதர தஸ்தாவேஜ்களிலும் பருந்து உருவத்தை அச்சிட்டான்.
ஜெர்மானியப் பேரரசும், ரஷ்யாவில் ஜார் அரசும் பருந்து அடையாளத்தை வைத்திருந்தனர். அமெரிக்க அரசும் பருந்து சின்னத்தை வைத்துள்ளது. அமெரிக்க யூனியனில் இருக்கும் ஒவ்வொரு மாநிலமும் தனிச் சின்னங்களை வைத்துள்ளன. தனியொரு நட்சத்திரம் (டெக்சாஸ்), சீமை எலி (உரிசான்), சூரியகாந்திப்பூ (கன்சாஸ்), ஜாதிக்காய் (கன்னக்டிகட்).
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவற்றைக் கொண்ட பிரிட்டனுக்கு, சிங்கம் தேசிய சின்னமாக விளங்குகிறது. இங்கிலாந்தைத் தனியாக குறிக்கும் போது, "ஜான் புல்' என்று அழைக்கின்றனர். பழைய நாட்டுப்புற கனவானுடன், காவல் நாயும் சேர்ந்து காணப்படுவதே, "ஜான் புல்' சின்னம். தற்கால சோவியத் ரஷ்யாவின் சின்னம் அரிவாளும், சுத்தியலும்.
இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக முசோலினி இத்தாலியின் சர்வாதிகாரியாக இருந்தபோது, "பாசிஸ்' என்ற ரோமானிய சின்னத்தைத் தேர்ந்தெடுத்தான். ஒரு கோடாரி சுற்றி வைக்கப்பட்ட இரும்புக் கம்பிக் கட்டுக்கு, லத்தீன் மொழியில் "பாசிஸ்' என்று பெயர். அதிலிருந்து பிறந்ததே, "பாஸிஸ்ட்' என்ற சொல்.
— "சர்வதேசக் கூட்டுறவின் வரலாறுகள்' நூலிலிருந்து...
S
ReplyDeletePost a Comment