பாரதிதாசன் வைத்துக் கொண்ட புனைப் பெயர்களில் ஒன்று, "கிண்டல்காரன்!' அது, எவ்வளவு பொருத்தமானது என்பதையும் நேரில் பார்த்திருக்கிறேன்.
மலேசியாவிலிருந்து, நாடக ஆசிரியர் ஒருவர், கையில் ஒரு நாடகக் கையெழுத்துப் பிரதியோடு பாரதிதாசனிடம் வந்தார். பாரதிதாசன் அதைப் படித்து, கருத்து கூற வேண்டும் என்பது அவர் விருப்பம்.
பாரதிதாசன், அவர் கொணர்ந்த சுவடியைப் புரட்டப் புரட்ட, மலேசிய நண்பரின் உள்ளத் துடிப்பு அதிகரித்தது. ஓரளவு கவிஞர் புரட்டி முடித்து விட்டார் பிரதியை.
கவிஞரை நோக்கிய மலேசிய நண்பர், "ஐயா!' என்றார்.
"இருக்கு, இருக்கு...எல்லாமே இருக்கு!'
"நல்லா வருங்களா?'
"வராம எங்கே போகப் போவுது... நகைச்சுவைப் பாத்திரங்கள் ரெண்டொன்று சேர்க்கணும்!'
"சேர்த்துட்டாப் போதுங்களா?'
"போதும்... போதும்! அப்படியே காட்சிகளைக் கொஞ்சம் அங்க இங்கே மாற்றி வைக்கணும்!'
"சரிங்க ஐயா!'
"கதை நல்லாருக்கு. கொஞ்சம் உயிரோட்டம் சேர்க்கணும்...'
"அப்புறம் ஐயா?'
"அப்புறம் என்ன... பிரமாதமா வந்திடும். நீ என்ன செய்யறே, வசனத்தை இன்னும் கொஞ்சம் திருத்திக்கணும். குறைக்க வேண்டிய இடத்திலே குறைச்சிடணும்... கூட்ட வேண்டிய இடத்திலே கூட்டணும்; அவ்வளவு தான். மற்றபடி நல்லாவே இருக்கு!'
"நல்லா இருக்குங்களாய்யா?'
"ஆமாம்பா... நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சுச் செய்யணும் நீ!'
அந்தக் கிண்டல்காரன், கொஞ்சம் கூட சிரிக்காமல், கேட்டுக் கொண்டிருப்பவர் ஐயப்படும்படியாக, தொனியில் வேறுபாடு கிளப்பாமல் பேசியதைக் கேட்டேன். உண்மையிலேயே, "பொல்லாத கிண்டல் காரர்'தான் பாரதிதாசன்.
— ஈரோடு தமிழன்பனின், "பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்' நூலிலிருந்து...
Post a Comment