Translate

"தி மெட்ராஸ் நான்-பிராமின் அசோசியேஷன்!' -

நீதிக் கட்சி தோன்றுவதற்கு முன்பே, பிராமணரல்லாதார் அமைப்பு ஒன்று, 1909ல், சென்னை நகரில் தோன்றி யுள்ளது. இந்த அமைப்பின் பெயர், "தி மெட்ராஸ் நான்-பிராமின் அசோசியேஷன்!' - அதாவது, "சென்னை பார்ப்பனரல்லா தார் சங்கம்!' என்பதாகும். பண்டிதர் அயோத்திதாஸ். (இவர் தாழ்த்தப்பட்டவர். "ஒரு பைசா தமிழன்!' என்ற அந்நாளைய பிரபல வார இதழை நடத்தியவர்) இந்த சங்கத்தின் பெயரில் உள்ள, "நான்-பிராமின்' எனும் கருத்து பற்றி, அவர் செய்துள்ள விமர்சனம் குறிப்பிடத்தக்கது. "நான்- பிராமின் கூட்டத்தார் என்றால் யாவர்?' எனும் அடிப்படைக் கேள்வியை, தம் விமர்சனத்தில் எழுதியுள்ளார். 

அவருடைய விமர்சனம்: சைவம், வைணவம், வேதாந்தம் எனும் சமயங்களையும், அந்த பிராமணர்கள் என்போர்களே ஏற் படுத்தி, அச்சமயத்தை எவரெவர் தழுவி நிற்கின்றனரோ, அவர்களும் பிராமணச் சார்புடையவர்களே யாவர். அத்தகைய செயலுள், ஜாதி ஆச்சாரங்களையும், சமய ஆச்சாரங்களையும் தழுவிக் கொண்டே, "நான்-பிராமின்ஸ்' என்று சங்கம் கூடியிருக்கின்றனரா, அன்றேல், ஜாதி ஆச்சாரங்களையும், சமய ஆச்சாரங்களையும் ஒழித்து, "நான்-பிராமின்ஸ்' என்று சங்கம் கூடியிருக்கின்றனரா என விளக்கவில்லை. 

அங்ஙனம் ஒழித்துள்ள கூட்டமாயிருப்பின், அவர்களுடன் சேர்ந்துழைப்பதற்கு அனந்தம் பேர் காத்திருக்கின்றனர். பிராமணர் என்போரால் வகுத்துள்ள ஜாதி ஆச்சாரங்களையும், சமய ஆச்சாரங்களையும் வைத்துக் கொண்டே, "நான்-பிராமின்ஸ்' எனக் கூறுவது வீண். காரணம், ஜாதியாசாரக் கிரியைகளிலும், பிராமணர்கள் என்போர் வர வேண்டியவர்களாய் இருக்கின்றனர். ஆதலின், இவ்விரண்டிற்கும் சம்பந்தப்பட்டவர்கள் யாவரும், "நான்-பிராமின்' ஆக மாட்டார்கள். மேற்கூறிய விமர்சனம் 1909ல் எழுதப்பட்டது. அதன்பின், 1917ல் தோன்றிய, "நான்-பிராமின்ஸ்' இயக்கமான நீதிக் கட்சிக்கும் பொருந்தியதாகும். 

— "பெ.சு.மணி கட்டுரைகள்' பூங்கொடி பதிப்பகம்.

Post a Comment

Previous Post Next Post