Translate

"கஜினி முகமது மாதிரி மீண்டும் மீண்டும்...'

திண்ணையில் அமர்ந்து, குப்பண்ணாவுடன் பேசிக் கொண்டிருந்த போது, அவரிடம் கேட்டேன்: "ஏன் குப்பண்ணா... இந்த, "கஜினி முகமது, கஜினி முகமது'ன்னு அடிக்கடி சொல்றாங்க! பள்ளிக்கூட சரித்திர புத்தகத்திலே கூட, அவன் பெயரைப் படிச்ச ஞாபகம். நம்ம பழைய பாரத நாட்டுக்குள் அடிக்கடி அவன் படையெடுத்து வந்து, கொள்ளையடித்து விட்டு, ஓடிப் போய் விடுவானாமே... அதைத் தவிர, அவனைப் பற்றி ஒண்ணும் விவரம் தெரியலியே...'

"உண்மையில் அவன் பெயர், கஜினி முகமது அல்ல; "கஜினி'ங்கிற நாட்டை ஆண்டு வந்தான். அதனால், கஜினி முகமதுன்னு சொல்றது... நேபாள மன்னர், ரஷ்ய அதிபர் இப்படின்னெல்லாம் சொல்றோம் இல்லையா... அது போல. ரொம்ப நல்லவன்; வல்லவன்...'

"என்னய்யா, அந்தக் கொள்ளைக்காரப் பாவி, அடிக்கடி நம்மூருக்குள்ளே கோவில் அது, இதுன்னு புகுந்து, கொள்ளையடிச்சிட்டுப் போயிருக்கான். அவனைப் போய் நல்லவன்னு சொல்றியே...'

"அப்படியல்ல, நாணா... நம்ம தமிழ்நாட்டு ராஜாக்கள் கூட, அந்தக் காலத்தில் வடநாட்டை வென்றான், இமயத்திலே புலிக் கொடி பறக்க விட்டான், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், இலங்கையை வென்றான் அப்படீனெல்லாம், நாம், நம் நாட்டு அரசர்களைப் பற்றி பெருமை பேசு கிறோமல்லவா?

"அதுபோல, அவனுடைய பாலைவன நாட்டிலே, பயிர், பச்சைக்கே பஞ்சம். நம் நாட்டிலே ஐந்து நதி பாயும், பஞ்சாப் பகுதி வளமாக இருந்தது. வந்தான்; கொள்ளை யடித்தான். கோவிலில் இருந்த தங்க விக்கிரகங்களை எடுத்துப் போனான். அந்தத் தங்கத்தை பக்கத்து நாட்டுக்கு விற்று, வேண்டிய பண்டம் வாங்கி, தன் நாட்டினரை காப்பாற்றினான். அவ்வளவுதானே!'

"அந்த கஜினி நாடு, எங்கே இருந்தது?'

"ஆப்கானிஸ்தானத்தில்! 998ல், தந்தைக்குப் பின், இவன் அரசானான். இந்தியாவின் மீது பதினேழு முறை படையெடுத்து வந்து, கொள்ளையடித்துச் சென்றான். பள்ளித் தேர்வில் மீண்டும் மீண்டும், "பெயில்' ஆகும் மாணவனை, "கஜினி முகமது மாதிரி மீண்டும் மீண்டும்...' என்று கேலி செய்வர்; அது தவறு.

"கஜினி படையடுத்து வந்த ஒவ்வொரு முறையும், அவன் தோற்றுப் போய் திரும்பவில்லை; தேவையானதை எடுத்துக் கொண்டு தான் சென்றான். ஆனாலும், அவன் இந்தியாவையும் கைப்பற்றி, அதைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் வைத்து, ஆட்சி செய்ய வேண்டும் என்று விரும்பவில்லை.

"இவனது சோமநாதபுரகோவில் படையெடுப்பு, பெயர் பெற்றது. கடைசியாக 1026ல், இந்தப் படையெடுப்பை நடத்தித் திரும்பியவனுக்குக் கடும் நோய் பற்றியது. அதிலிருந்து மீள முடியாமல், 1030ல், தன் 39ம் வயதில் இறந்து போனான்!'

"ஆனால், அவன் ரொம்ப நல்லவன் என்று சொல்லுமளவுக்கு என்ன செய்து விட்டான்?'

"பொதுவாகப் போர்த் திறனில் வல்லவனாக இருப்பவனிடம் முரட்டுத்தனம் தான் இருக்கும்; அறிவுத்திறன் இருக்காது. ஆனால், கஜினியும், அலெக்சாண்டரும், இந்த வகையில் ஒற்றுமையானவர்கள். அதாவது வீரம், விவேகம் இரண்டிலும் சிறந்தவர்கள்.

"கஜினி, தான் கொள்ளையடித்துச் சென்ற செல்வத்தைக் கொண்டு, தன் நாட்டில் ஒரு பெரிய பல்கலைக்கழகமும், ஒரு நூல் நிலையமும் நிறுவினான். கல்வியையும், கல்வியாளர்களையும் பெரிதும் ஆதரித்தான். வானவியல் மற்றும் கணித ஆசிரியரான அல் பெரூனியும், "ஷா நாமா' எனும் சிறந்த காவியத்தை இயற்றிய பிர்தவ்ஸி எனும் பாரசீக மகாகவியும், அன்சாரி கவியும், கஜினி முகமதுவின் ஆதரவைப் பெற்று விளங்கினர்...' என்றார் குப்பண்ணா.      

செனகா என்று ஒருவர். பித்தாகரசின் சீடர். செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் ஒரு ஜோடி செருப்புகளை வாங்கிக் கொண்டு, அடுத்த வாரம், பணம் தருவதாகச் சொல்லியிருந்தார்.

ஒரு வாரம் கழித்துப் போனபோது, அந்தத் தொழிலாளி, இறந்து போயிருந்தார். தன் அதிர்ஷ்டத்தை மெச்சிக் கொண்டே அமைதியாகத் திரும்பி விட்டார் செனகா.

ஒரு வாரம் நந்தையாய் நகர்ந்தது. ஒவ்வொரு நாளும் குற்றவுணர்வில், குறுகிக் கொண்டிருந்தார் செனகா. பொறுக்க முடியாமல், அந்த செருப்புக் கடைக்குப் போய், ஆவேசமாகப் பணத்தை வீசினார்.

"தொலைந்து போ! ஊருக்கெல்லாம் செத்துப் போன நீ, எனக்கு மட்டும் ஒரு வாரமாய் உயிரோடிருந்தாய்...' என்று அலறிவிட்டு வந்தாராம்.    

Courtesy: Dinamalar Thinnai 3.10.2010   


x

Post a Comment

Previous Post Next Post