Translate

56. "உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்".

கி.வா.ஜ அவர்களின் சிலேடை நகைச்சுவை

புடவையின் சிறப்பு...

ஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.ஜ. சென்றார். நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில் வசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை.

வாசல் பக்கத்தில்தான் வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து வெய்யில் படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப் போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா.ஜ.,

'இது என்ன புடவை தெரியுமா?' என்று நண்பரைக் கேட்டார்.
'ஏன் சாதாரணப் புடவைதானே?' என்றார் நண்பர்.

'அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு. இதுதான் உண்மையான வாயில் புடவை!' என்றார் கி.வா.ஜ.

உள்ளே வெளியே

கி.வா.ஜ தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய சண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டிகொள்ள தொடங்கினர். கி.வா.ஜ எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா.ஜ கூட்டத்தை விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது.

அப்பொழுது அவர் சொன்னார் "உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்".
வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்

சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.

“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ.

“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!

Post a Comment

Previous Post Next Post