பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், இளம் பிராயத்தில், மேடைப் பாடல்கள் பாடுவதில், மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார். அவரது அண்ணன் கணபதி சுந்தரம், சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். அவர் பாடல்களை எழுதிக் கொடுப்பார். அதை மனப்பாடம் செய்து, மேடைகளில் பாடுவார் கல்யாண சுந்தரம்.
அப்போது, அவருக்கு வயது எட்டு. இப்படி அவர் பாடிய மேடைப்பாடல் பயிற்சியே, பின்னாளில் பாமரர்கள் ரசிக்கும் விதத்தில், எளிமையாகப் பாட வழி வகுத்தது. பின்னர், அவரே சொந்தமாகப் பாடல் எழுதி, மேடையில் பாடத் தொடங்கினார். "நல்லதைச் சொன்னா நாத்திகனா?' என்பது, அவர் எழுதிய முதல் பாடல்.
கும்பகோணம் குருதாஸ் என்பவர், 1946ல், தாமே சுயமாக, நாட்டுப் பாடல்கள் போன்ற கவிதைகளை எழுதி, அதைப் பாட்டுப் புத்தகம் போல, சிறு பிரசுரமாக அச் சிட்டு, கோவில் திரு விழாக்களில், பொதுமக்களிடம் காலணா விலைக்கு விற்பார். கல்யாண சுந்தரத்திற்கும், அதுபோல, தாம் இயற்றும் பாடல்களையும் வெளியிட்டு, பொதுமக்களிடம் பரவச் செய்ய ஆசை. அப்போது, அவருக்கு வயது பதினாறுதான். பட்டுக்கோட்டை நகரின் மணிக்கூண்டுக்கு அருகில் இருந்த, "நைனர் பிரஸ்' எனும் அச்சகத்தில், தாம் எழுதிய பாடல்களை அச்சிடுவதற்குக் கொடுத்தார்.
புத்தகம் அச்சாகி விட்டது. ஆனால், அதை அச்சகக்காரரிடம் பணம் கொடுத்து வாங்க, கல்யாண சுந்தரத்திடம் பணம் இல்லை. 500 பிரதிகள் அச்சிடப்பட்டிருந்தது. அதில், "25 பிரதிகள் மட்டும் முதலில் கொடுங்கள்; அதை விற்றுக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, மேலும் கொஞ்சம் பிரதிகள் பெற்றுக் கொள்கிறேன்...' என்றார். அச்சக உரிமையாளரோ, "பணம் கொடுத்தால் தான் பிரதிகளைக் கொடுப்பேன்...' என பிடிவாதம் பிடித்தார். அப்போது அங்கே வந்தார், பட்டுக்கோட்டை நகர கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் மாசிலாமணி என்பவர். விஷயத்தைக் கேட்டார்.
கல்யாண சுந்தரத்திற்கு அவர் ஜாமீன் சொன்னார். அதன் பேரில், 25 பிரதிகளைப் பெற்று சென்ற கல்யாண சுந்தரம், விரைவிலேயே மீதிப் பிரதிகளையும் பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டார். கல்யாண சுந்தரத்திடம் இயல்பிலேயே இருந்த முற்போக்கு மனப்பான்மையும், கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்கள், இளைஞர் களோடு எளிதாக இறங்கி வந்து தோழமை கொள்ளும் குணமும் தான், அவரை சுயமரியாதை இயக்கத்திலிருந்து, பொதுவுடமை இயக்கத்திற்கு இழுத்து வந்து சேர்த்தன. கல்யாண சுந்தரம், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பிறகு, கம்யூனிஸ்ட் இயக்கம் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், பட்டுக்கோட்டை ஊரின் பக்கம் வந்து தலைமறைவாக தங்கியிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு சாப்பாடு கொண்டு செல்லும் வேலையைச் செய்தார்.
போலீஸ் அடக்கு முறைக்கு கட்சியினர் ஆளான நிலையில், கட்சி அலுவகத்தில் இருந்த ரெக்கார்டுகளை எல்லாம், கல்யாண சுந்தரம் வீட்டில் தான் மறைந்து வைத்தனர், கட்சிக்காரர்கள். கல்யாண சுந்தரத்தின் நட வடிக்கைகளையும், போலீஸ் கண் காணிக்கத் துவங்கினர். எனவே, கல்யாண சுந்தரத்தின் தந்தை, அந்த ரெக்கார்டுகளை மூட்டை யாகக் கட்டி, கொண்டு போய் குளத்தில் போட்டு விட்டார். அவர் அவ்வாறு செய்யாது போயிருந்தால், கட்சிக்காரர்கள் பலர், போலீஸ் பிடியில் சிக்கித் துன்பப் பட்டிருப்பர்.
கல்யாண சுந்தரம் குடும்பம் சுயமரியாதை இயக்கத்தில் ஈடு பட்டிருந்ததால், அவரது தந்தை காலமாகி, 16ம் நாள் நடந்த சடங்கில் கலந்து கொள்ள, கருணாநிதியை அழைத்தனர். அப்போது, கல்யாண சுந்தரம் மேடையில் ஏறி, கையில், "தப்பு' வைத்து அடித்து கொண்டு, கொள்கைப் பாடல்களைப் பாடினார். அதன் பிறகு கருணாநிதி பேசினார்.
Post a Comment