சங்கத்தமிழ் பழமொழி நானூறு
22. உறவாடும் பகைவரை ஒதுக்கிவிட வேண்டும்
பறவைகளின் ஆரவாரத்தைக் கொண்ட பொய்கைகளையுடைய நீர்வளமிகுந்த ஊரனே! பகைவர்கள் வெள்ளம்போற் பெரும்படையினை உடையவர்கள் என்றாலும், அவர் வேற்றிடத்தினராயிருந்தால் அவர்களால் என்ன தீங்கைச் செய்து விட முடியும்? ஆனால், உள்ளத்திலே கள்ளம் உடையவராக நம்முடன் நெருங்கிப் பழகுபவரின் பெரிய போலி நட்பு இருக்கிறதே, அது மிகவும் கேட்டைத் தரும். அதுதான் ஒரே வீட்டிற்குள்ளேயே கடன் பட்டது போல இடையறாத பெரிய வேதனையைத் தருவதுமாகும்.
வெள்ளம் பகையெனினும், வேறிடத்தார் செய்வதென்?
கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு
புள்ளொலிப் பொய்கைப் புனலூர! அஃதன்றோ,
'அள்ளில்லத்(து) உண்ட தனிசு'.
உட்பகையின் பெருங்கேடு கூறி, அதனை ஒறுத்து நடத்தும் நெறி வற்புறுத்தப்பட்டது. தனிசு - கடன். 'அள்ளில்லத்து உண்ட தனிசு' என்பது பழமொழி
Post a Comment