சங்கத்தமிழ் பழமொழி நானூறு
9. மகனுக்குச் செய்ய
வேண்டியது
ஒரு தகப்பன், எந்த வகையிலே யானாலும்,
தன் மக்களைச் செம்மையான நெறியிலேயே மேம்பட்டு நிற்குமாறு அதற்குத் தகுதியானவற்றையே
செய்தல் வேண்டும். தான் செய்த பாவையே ஒரு சிற்பிக்குப் பின்னர் தெய்வமானது போல, அப்படிச்
செந்நெறியிலே மக்களை நிலையாக நிற்கச் செய்தால், அம்மக்கள் பிற்காலத்தில் தந்தையாலும்
போற்றப்படும் உயர்ந்த பெருநிலையினை அடைவார்கள்.
எந்நெறி யானும் இறைவன்தன் மக்களைச்
செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும்
- அந்நெறி
மான்சேர்ந்த நோக்கினாய்! - ஆங்க 'அணங்காகும்
தான்செய்த பாவை தனக்கு'.
மக்களைச், செந்நெறிமேற் செல்லுதலில் தகுதியுடையவராக்குதல் தான் ஒரு தந்தையின் கடமை. அணங்கு - தெய்வம், பாவை - செதுக்கிய சிலை. 'அணங்காகும் தான் செய்த பாவை தனக்கு' என்பது இதிலுள்ள பழமொழி. 'இறைவன்' என்றதால், ஓர் அரசன் தன் குடிமக்களைச் செந்நெறிமேல் நிற்கச் செய்ய வேண்டும் என்பதும் இதனால் அறியப்படும்.
Post a Comment