சங்கத்தமிழ் பழமொழி நானூறு
6. தருமம் செய்யுங்கள்
தோன்றுவதற்கு அருமை உடையதாகிய மக்கட்
பிறப்பினைப் பெற்றுள்ளோம். அதனால், முடிந்த வகைகளிலே எல்லாம் தரும காரியங்களைச் செய்து
வருக. கொஞ்சமும் மாற்றுவதற்கு இயலாதவண்ணம் அஞ்சப்படும் நோய், முதுமை, அருங்கூற்று ஆகியவை
எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இறக்கும்படியான நிலையிலே தருமஞ் செய்யலாமென்று ஒதுக்கி வைத்தல்,
அந்த வேளையிலே, தருமம் செய்ய இயலாதபடி அறிவு மயக்கமும் வந்து சேர்ந்து விடலாம்.
தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறஞ்செய்க! - மாற்றின்றி
'அஞ்சும் பிணிமூப்(பு) அருங்கூற்(று)
உடனியைந்து
துஞ்ச வருமே துயக்கு'.
யாக்கையின் நிலையாமை கூறினார். தருமத்தை இளமையிலேயே செய்க; பின்னர் பார்த்துக் கொள்ளலாமென்றால், அது முடியாதும் போகலாம். 'அஞ்சும் பிணி, மூப்பு, அருங்கூற்று உடனியைந்து துஞ்ச வருமே துயக்கு' என்பது பழமொழி.
Post a Comment