நவாப் ராஜமாணிக்கம் என்பவர், அந்தக் காலத்தில் கொடிகட்டிப் பறந்த நாடக நடிகர். சொந்தமாக நாடகக் கம்பெனி வைத்து, தமிழகம் முழுவதும் நாடகங்கள் நடத்தி வந்தார். இவர், ஒருமுறை தன் நாடகத்தைக் கும்பகோணத்தில் நடத்திக் கொண்டிருந்தார். அதே நாட்களில், எம்.ஆர்.ராதாவும் கும்பகோணத்தில் தன் நாடகத்தை நடத்தி வந்தார்.
நவாப் ராஜமாணிக்கத்தினுடையது புராண-பக்தி நாடகங்கள்! ராதாவுடையதோ நாத்திகப் பிரசார நாடகங்கள். நவாப்பின் நாடகங்களுக்குத் தான் நல்ல கூட்டம்; வசூல். ராதாவுக்கு, "கலெக்ஷன்' சரியில்லை.
ஒரு நாள், நேராக நவாப் ராஜமாணிக்கத்திடம் போனார் ராதா. "எனக்கு அவசரமாகக் கொஞ்சம் பண உதவி வேண்டும்; கொடுங்கள்...' என்று கேட்டார். ராஜமாணிக்கத்திற்குக் கோபம் வந்து விட்டது.
"ஏன்யா... நான் பக்தி நாடகம் போடறேன்... எனக்கு எதிராக நீ நாத்திகப் பிரசார நாடகம் போடறே. அப்புறம் என்னிடமே வந்து பணம் கேட்கிறாயே?' என்று கேட்டார்.
"நான், "கடவுள் இல்லை'ன்னு சொல்லி நாத்திக நாடகம் போடறதால தான், "கடவுள் உண்டு'ன்னு சொல்லி பக்தி நாடகம் போடற உங்க நாடகத்துக்கு கூட்டம் வருது. என் மீது இருக்கிற கோபத்திலே, ஆஸ்திகர்கள் உங்க நாடகத்துக்கு வர்றாங்க. நாளைக்கே நான் என் நாடகத்தை வேற ஊருக்கு மாத்திட்டுப் போயிட்டா, அப்புறம் உங்க நாடகத்துக்கு எவனும் வர மாட்டான். அப்புறம், நீங்க ஈ ஓட்ட வேண்டியது தான். இப்ப என்ன சொல்றீங்க? பணம் கொடுக்கறீங்களா அல்லது நாளைக்கே நான் நாடகக் குழுவோட வேறு ஊருக்குப் புறப்படவா?' என்று கேட்டார் ராதா.
கொஞ்சம் யோசித்த நவாப் ராஜமாணிக்கம், பேசாமல் உள்ளே போய், ஒரு பெருந் தொகையைக் கொண்டு வந்து ராதாவிடம் கொடுத்து, வழியனுப்பி வைத்தார்.
பிடித்தது -43
இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
Post a Comment