Translate

"ஏகலைவனுக்கு துரோணாச்சாரியார் இழைத்த கொடுமையை, பீகார் மாநிலத்தில் வசிக்கிற மலைவாழ் மக்கள் இன்னமும் மறக்க வில்லை!'

இந்தியாவின் பிரபலமான திரைப்பட இயக்குனர்களில், மிருணாள் சென் குறிப்பிடத்தக்கவர். அவர், "மிர்கயா' என்று ஒரு படம் எடுத்தார். அந்தப் படம், பீகார் மாநிலத்தில் உள்ள மலை ஜாதியினரின் வாழ்க்கை முறையை மையக் கருத்தாகக் கொண்டிருந்தது. அதில் கதாநாயகனாக நடித்தவரை, மலைவாழ் மக்களிடம் பழக விட்டு, அவர்கள் எவ்வாறு வில்லை பிடித்து, அம்பு எய்து வேட்டையாடுகின்றனர் என்பதை கற்றுக் கொள்ளச் செய்தார் சென். அந்த நடிகரும், அந்தப் பாத்திரத்தைத் திறம்பட ஏற்று நடித்தார். காட்சி படமாக்கப்பட்ட போது, குறி தவறாமல் அம்பு எய்து, மானை வீழ்த்தினார். சென்னுக்கு ரொம்ப சந்தோஷம். காட்சி படமாக்கப்பட்டவுடன், அங்கிருந்த ஒரு மலைஜாதிப் பெரியவரை அழைத்து கருத்து கேட்டார் சென். "கதாநாயகன் வில்லைப் பிடித்த முறை சரியில்லை...' என்றார் பெரியவர். 

"ஏன்?' என்று கேட்டார் சென்.

 
பெரியவர் சொன்னார்: "இங்குள்ள மலைவாழ் மக்கள், நாண் ஏற்றி அம்பு எய்கிற போது, அம்பின் மீது கட்டை விரல் படாமல் தான் அம்பு எய்வர்; ஆனால், உங்கள் கதாநாயகன், கட்டை விரலால் பிடித்து அம்பு எய்கிறார்...' என்றார்.

"
ஏன் கட்டை விரலைப் பயன்படுத்துவதில்லை?' என்று கேட்டார் சென். அதற்கு அந்த பெரியவர், "துரோணரை மானசீகக் குருவாகக் கொண்டு, வில் வித்தையில் தேர்ச்சி பெற்றான் ஏகலைவன்; ஆனால், துரோணரோ, அவனுடைய கட்டை விரலை காணிக்கையாகப் பெற்று, அவனுடைய வில் வித்தையின் சாதனைகளைக் குறைக்க முயன்றார்.

"
ஆகவே, அதை நாங்கள் சவாலாக ஏற்று, பரம்பரை பரம்பரையாக, கட்டை விரலைப் பயன்படுத்தாமலேயே, வில் வித்தையில் தேர்ச்சி பெற்று வருகிறோம். ஆதனால், உங்கள் கதாநாயகன் அம்பு எய்யக் கட்டை விரலைப் பயன்படுத்தியது சரியில்லை...' என்றார். "ஏகலைவனுக்கு துரோணாச்சாரியார் இழைத்த கொடுமையை, பீகார் மாநிலத்தில் வசிக்கிற மலைவாழ் மக்கள் இன்னமும் மறக்க வில்லை!' என்றார் மிருணாள் சென்.

தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -33


இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.

Post a Comment

Previous Post Next Post