தாயின் மீது பாசமும், பக்தியும் கொண்டிருந்தவர், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். தாயார் மறைவுக்கு முன் வரையிலும், சில சந்தர்ப்பங்களில், தன் அன்புத் தாயாரிடம், அவர் அடி வாங்குவார்.
தேவர் பிலிம்ஸ் தயாரித்த எல்லா படங்களுக்கும், கே.வி.மகாதேவன் தான் அப்போது இசையமைத்து வந்தார். இதில் ஒரு மாற்றம் வேண்டும் என்று, சில வினியோகஸ்தர்கள் விரும்பியதன் காரணமாக, விஸ்வநாதனின் வீட்டிற்குச் சென்றார் தேவர்.மொத்தப் பணத்தையும் நீட்டி, தன் படத்திற்கு இசை அமைக்கும்படி கேட்டார். விஸ்வநாதனும், பணத்தைப் பெற்றுக் கொள்ள முனைய, பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த விஸ்வநாதனின் தாயார், "பளார்' என்று தன் மகனின் கன்னத்தில் ஒரு அறை விட்டு, "நன்றி கெட்டவனே... ஒரு காலத்துல நீ வேலை இல்லாம கஷ்டப் பட்டப்போ, அய்யர்கிட்டே போய் (கே.வி.மகாதேவனி டம்) உதவி கேட்டப்போ, உனக்குப் போட்டுக்க சட்டை கொடுத்து, ரயில் செலவுக்குப் பணம் கொடுத்து, உன்னைக் கோயமுத் தூருக்கு அனுப்பினாரே... அதை மறந்துட்டியா? அந்த புண்ணியவான் தொழில் பண்ற இடத்துக்கு, நீ போட்டியா போகலாமா?' என்று கோபத்துடன் கூறிவிட்டு, தேவரை நோக்கிக் கைகுவித்து கும்பிட்டு, "ஐயா... நீங்க எவ்வளவு பணம் குடுத்தாலும், என் புள்ளை உங்க படத்துக்கு பாட்டு போடமாட்டான். நீங்க அய்யரையே வச்சுப் போட்டுக் குங்க...' என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.
அலுவகத்துக்குத் திரும்பி, எங்களிடம் இதைக் கூறி, "இப்படியும் ஒரு தாயும், பிள்ளையுமா?' என்று ஆச்சரியம் அடைந்தார் தேவர்.
இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த ஆபத்தான நிலையில், தன் பிள்ளையை போன்ற விஸ்வநாதனிடம், தன் மனதில் இருந்த ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று விரும்ப, அதைக் கேள்விப்பட்ட விஸ்வநாதன், அவரைக் காண ஓடோடி வந்தார்.
அதற்குள், அவரிடம் சொல்ல வேண்டியதைச் சொல்ல முடியாமல், சுப்பையா நாயுடுவின் உயிர் பிரிந்துவிட்டது. அவர் எழுதி வைத்திருந்த உயிலில், "எனக்கு குழந்தைகள் கிடையாது... விஸ்வநாதன் என் பிள்ளையாக இருந்து வருகிறான். ஆகவே, நான் இறந்த பிறகு, அவன் தான் எனக்குக் கொள்ளி வைத்து, என் இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும்!' என்று எழுதியிருந்தார்.
தந்தையைச் சிறு வயதிலேயே இழந்த தனக்கு, தந்தையாகவும், குருவாகவும் இருந்தவரின் இறுதி விருப்பத்தை, இதய சுத்தியோடு நிறைவேற்றி வைத்ததுடன், கணவரை விட்டால் வேறு கதி இல்லை என்று இருந்த அவரது துணைவியாரை, தன் வீட்டிலேயே வைத்திருந்து கவனித்து, கடைசியில், அவருக்கும் தன் கையாலேயே கொள்ளியிட்டு, குருநாதருக்கு நன்றிக் கடன் செலுத்தினார் விஸ்வநாதன்!
— "நான் முகம் பார்த்த கண்ணாடி கள்' நூலில் ஆரூர்தாஸ்.
Post a Comment