Translate

சிபாரிசு செய்ய வேண்டும்!

அண்ணாதுரை ஏதேனும் ஒரு உத்தியோகத் தில் இருக்க வேண்டும் என்பது, அவரது சின்னம்மாவின் (வளர்ப்புத் தாயார்) விருப்பம்; ஆனால், அண்ணாதுரைக்கோ, ஒருவரின் கீழ் பணிபுரிவதில் விருப்பமில்லை. சிறிய தாயாரின் சொல்லை, அண்ணாதுரை எப்போதும் தட்டிப் பேசியதில்லை. எனவே, அவரது வற்புறுத்தலின் பேரில் அப்போது, "குமார' ராஜாவாக இருந்த சர்.முத்தையா செட்டியாரை சந்திக்க, அண்ணாதுரை சென்றார்.

குமார ராஜா, தன் அரண்மனைக்கு அருகே ஓடும் (சென்னை) அடையாற் றில் படகில் அமர்ந்தபடி, அண்ணாதுரையுடன் உரையாடிக் கொண்டே சென்றார். 75 ரூபாய் சம்பளம் தரக்கூடிய கல்லூரியில், விரிவுரையாளர் வேலை தர வேண்டுமென்று அண்ணாதுரை கேட்டதற்கு, "அது வேண்டாம்; நம் ஜஸ்டிஸ் கட்சிக்கு நல்ல பேச்சாளர் கிடைப்பது பின் அரிதாகிவிடும். ஆதலால், எனக்கு அந்தரங்க செயலராக இருங்கள். மாதம் 120 ரூபாய் சம்பளம் தருகிறேன்!' என்றார் குமார ராஜா.

ஆனால், அண்ணாதுரை வீடு திரும்பியதும், "அன்புள்ள ஐயா... தங்கள் பணியை மேற்கொள்ள இயலாததற்கு வருந்துகிறேன்!' என்று ஒரே வரியில் ராஜாவுக்கு கடிதம் எழுதிப் போட்டு, பிரச்னையிலிருந்து விலகிக் கொண்டார்.

பிறகு அண்ணாதுரை, வேறோரு அரசியல் பிரமுகரிடம், கிளார்க் வேலைக்காக சிபாரிசு கடிதம் பெற்று, சப்-மாஜிஸ்டிரேட் ஒருவர் வீட்டிற்குச் சென்றார். மாதிஸ்டிரேட் அப்போது வீட்டினுள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வெளியில் இருந்த வேலைக்காரரிடம், ஒரு காகிதத்தில், சி.என்.அண்ணாதுரை, காஞ்சிபுரம் என்று எழுதிக் கொடுத்து, "இதை சப்-மாஜிஸ் டிரேட்டிடம் காண்பித்து, நான் வந்திருப்பதாகச் சொல்லு...' என்று அனுப்பி விட்டு, வெளியில் நின்று கொண்டிருந்தார்.

வேலைக்காரர் கொடுத்த சீட்டைப் பார்த்த சப்-மாஜிஸ்டிரேட், சாப்பாட்டைக் கூட பாதி யிலேயே வைத்து விட்டு, வெளியில் வந்தார். "வாருங்கள்! வாருங்கள்! தாங்கள் தான் அண்ணாதுரையா? ஐம்பது வயதாவது இருக்கும் என்று எண்ணினேன். இவ்வளவு இளமையாக  இருக்கிறீர்களே...' என்று கூறிக் கொண்டே, "தாங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். ஆற்காடு ராமசாமி முதலியாரிடம் சொல்லி, எனக்கு நீதிபதி வேலை வாங்கித் தர தாங்கள் தான் சிபாரிசு செய்ய வேண்டும்!' என்று கேட்டுக் கொண்டார்.

வேலை தேடி வந்த அண்ணாதுரையோ, தனக்கு அரசியலில் நல்ல செல்வாக்கும், எதிர்காலமும் இருப்பதைக் கண்டு, வேலை கூடக் கேட்காமல் வீடு திரும்பி விட்டார்; தீவிர அரசியலில் ஈடுபடலானார்.

 தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -28

இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.


Post a Comment

Previous Post Next Post