சங்கத்தமிழ் பழமொழி நானூறு
17. செய்பவனுக்குத்தான் வருத்தம் தெரியும்!
மக்கள் வரிசையாக இருந்து, அதனால் மாட்சிமைப்பட்டு
விளங்கும் ஒரு வட்டாடும் அரங்கம். அந்த அரங்கினுள்ளே, தாம் வட்டாடாமல் ஒதுங்கிப் பக்கத்திலே
இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் சிலர்; அவர்களுக்கு வட்டாடும் போர் மிகவும் எளிதாகவே
தோன்றும். அதன் நுட்பத்தினை அறிந்தவர்க்கே, அதன் உண்மையான நிலைமைகள் தோன்றும். அது
போலவே, அருகே இருந்து நுண்மையான கருத்துக்களைச் சொன்னாலும் ஈடுபடும் செயலானது குறைபாடுடையதாக
இருப்பதான அதன் தன்மையை அறியாதவன், அதனைச் செய்யப் புகுந்தால், செயல் முற்றுப்பெறாது
அழிவடைதலும் உண்மையாகும்.
உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம்
புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல்,
நிரையிருந்து மாண்ட 'அரங்கினுள் வட்டு,
கரையிருந் தார்க்கெளிய போர்'.
செயலின் உண்மையான நிலையறியாமல் ஈடுபடுவது அழிவைத் தரும். 'அரங்கினுள், வட்டு கரையிருந்தார்க்கு எளிய போர்' என்பது பழமொழி.
Post a Comment