சங்கத்தமிழ் பழமொழி நானூறு
13. அன்பால் சாதிக்க வேண்டும்
அன்பினால் ஒருவனுடைய உள்ளம் நெகிழ்ச்சி
அடையுமாறு செய்து அவன் வழியே நடந்து, அவனால் காரியத்தை முடித்துக் கொள்ளுதலே சிறந்தது.
அங்ஙனமில்லாமல், நின்ற இடத்திலேயே அவனை வற்புறுத்திக் காரியத்தை முடித்துக் கொள்ள முயல்வது
தவறானதாகும். அது, கன்றைக் குடிக்க விட்டுப் பசுவிலே பால் சுரந்து வரும்பொழுது கறந்து
கொள்ளாமல் அம்பு எய்து பசுவைக் கொன்று பால் கறக்க முயல்வது போன்ற பேதைமையான செயலும்
ஆகும்.
அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது,
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
கன்றுவிட்(டு) ஆக்கறக்கும் போழ்தில்
கறவானாய்,
'அம்புவிட்(டு) ஆக்கறக்கும் ஆறு'.
செயலை முடிக்கும் முறைமை இதன்கண் கூறப்பட்டது. பிறரை மனம் நோகச் செய்து காரியம் சாதிக்க நினைப்பவரின் பேதைமையும் சொல்லப்பட்டது. 'அம்பு விட்டு ஆக்கறக்குமாறு' என்பது பழமொழி.
Post a Comment