Translate

கூகுளின் Willow - ‘குவாண்டம் சிப்’பின் அபார வேகம் மற்றும் எலான் மஸ்க்கின் பாராட்டு

2020 - கொரோனா பாதிப்புகளைத் தொடர்ந்து, கணினி உலகம் ஒரு புதிய பரிணாமத்தை (dimension) நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தினமும் புதிய உயரங்களைத் தொட்டு வருகின்றன. ஒரு வாரம் முன்பு கூகுளின் Willow ப்ராசசர் அறிவிப்பு மொத்த உலகையே வாய்மேல் விரல் வைக்க விட்டுள்ளது.


இதுவரை கணினி துறையில் சிப் மற்றும் ப்ராசசர் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருந்து வந்த நிறுவனங்கள் IBM, Intel, AMD மற்றும் Apple ஆகியவைதான். இந்த நிறுவனங்கள் தங்களது தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் கணினி உலகை இந்த உயரத்திற்கு வழிநடத்தி வந்துள்ளன.

ஆப்பிள் நிறுவனம் தனது கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்களுக்காக வருடா வருடம் புதிய சிப்புகளை அறிமுகப்படுத்தி வருவது நாம் அறிந்ததே. இந்த சிப்புகள் தனித்துவமான வடிவமைப்பு (Design) மற்றும் செயல்திறன் (Performance) கொண்டவை. ஆப்பிள் சிப்புகள், குறிப்பாக மென்பொருள் (Softwares) மற்றும் கணினி கட்டமைப்புகளுடன் (Architecture) சிறப்பாக இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், ஆப்பிள் சாதனங்கள் மிகவும் பாதுகாப்பாகவும் வேகமாகவும் இயங்குகின்றன. ஆப்பிள் தனது சிப்புகளை வெளியில் விற்காமல், தனது சாதனங்களில் மட்டுமே பயன்படுத்துவதால், மற்ற நிறுவனங்கள் இந்த சிப்புகளைப் பயன்படுத்த முடியாது. இது ஒருபுறம் ஆப்பிள் சாதனங்களின் தனித்துவத்தைப் (individuality) பேணினாலும், மறுபுறம் தொழில்நுட்ப வளர்ச்சியில் போட்டித்தன்மையை குறைக்கிறது என்றும் கூறலாம்.


சரி இந்த குவாண்டம் சிப்பில் என்ன உள்ளது என பார்ப்போமா…

நவீன அறிவியல் உலகில் குவாண்டம் இயற்பியல் (Quantum Physics) மற்றும் குவாண்டம் இயக்கவியல் (Quantum Mechanics) ஆகியவை புதிய கதவுகளைத் திறந்து கொண்டே இருக்கின்றன. இந்த குவாண்டம் அறிவியலை கணினி உலகிற்கு கொண்டு வர கூகுள் மற்றும் IBM போன்ற பெரிய நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றன. இந்த ஆராய்ச்சியின் முக்கியமான ஒரு பகுதியாக, குவாண்டம் கணினிகள் (Quantum Computing) உருவாக்கலாம் என்று திட்டமிட்டுள்ளன. ஆனால் திடீரென கடந்த வாரம் கூகுள் வெளியிட்ட வில்லோ (Willow) சிப், குவாண்டம் கணினி தொழில்நுட்பத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்த சிப், குவாண்டம் பிட்கள் (qubits) எனப்படும் குவாண்டம் துகள்களைப் (Particles) பயன்படுத்தி தகவல்களைச் செயலாக்குகிறது. 

இந்த குவாண்டம் பிட்கள் என்றால் என்ன கொஞ்சம் பார்ப்போமா…

நாம் பேசும் மொழிகள், பல எழுத்துக்களையும் சொற்களையும் கொண்டிருந்தாலும், கணினிகள் மிகவும் எளிய ஒரு மொழியைப் பயன்படுத்துகின்றன - 0 மற்றும் 1. இந்த இரண்டு எண்களின் கலவையே கணினிகளின் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக இருக்கிறது. இது மின்சார (Electrical) உலகில் அதாவது ஒரு மின் சுற்றில் (Circuit) மின்சாரம் பாய்கிறது அல்லது பாயவில்லை என்பதை குறிக்கவே இந்த 0 மற்றும் 1 பயன்படுத்தப்படுகிறது. பாய்கிறது என்றால் 1, பாயவில்லை என்றால் 0. இவ்வாறு மிகவும் எளிமையான ஒரு முறையில்தான் கணினிகள் செயல்படுகின்றன. இந்த 0 மற்றும் 1களை வெவ்வேறு வரிசைகளில், வெவ்வேறு சேர்க்கைகளில் பயன்படுத்துவதன் மூலம் மிகவும் சிக்கலான கட்டளைகளை கணினிகளுக்கு கொடுக்க முடியும். இதை நாம் பைனரி கோட் என்று அழைக்கிறோம். இந்த இரண்டிற்குள் தான் அனைத்தும் இயங்குகின்றன. உதாரணத்திற்கு ‘A’ என்கின்ற ஒற்றை எழுத்திற்கு 01000001 என்ற 8பிட் பைனரி எழுத்து கம்ப்யூட்டர்க்கானது. இது போன்று ஒவ்வொரு எழுத்திற்கும் பைனரி கோடுகள் உள்ளது. எனது பெயர், BALAJI என்பதற்கான பைனரி கோட் B: 01000010 A: 01000001 L: 01001100 A: 01000001 J: 01001010 I: 01001001 அவ்வளவுதான். தலை சுற்றுகிறதா. ஆனால் இந்த பைனரி பிட்டான 0-1 இரண்டிற்கும் இடையில் ஏகப்பட்ட variations இருக்கும் அல்லவா? அந்த variationsகளை பயன்படுத்தி ஒவ்வொரு செயலை செயல்படுத்தினால் என்ன என்று யோசித்ததின் விளைவுதான் இந்த Quantum Chip. 


0-1 இரண்டிற்குமிடையில் உள்ள ஒவ்வொரு variantகளையும் Qubit என்று அழைக்கிறார்கள். தமிழில் குவாண்டம் துகள்கள் என்றே அழைக்கலாம். அந்த Qubitகளை வைத்து எவ்வளவு கோடி செயல்களை செய்யலாம் என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வியந்து போனார்கள். அதன் விளைவு தான் இந்த சிப். 
கூகுளின் புதிய குவாண்டம் சிப், வில்லோ, அதன் அபாரமான செயல்திறனால் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திரு. சுந்தர் பிச்சை அவர்கள் இந்த சிப்பை அறிமுகப்படுத்தும்போது வெளியிட்ட தகவல்கள், இந்த சிப்பின் தொழில்நுட்பத்தின் சக்தியை நன்கு எடுத்துரைக்கின்றன.

இந்த Willow குவாண்டம் சிப்பானது ஐந்து நிமிடத்தில் ஒரு பெரிய காம்ப்ளக்ஸ்ஸான விஷயத்தை செய்து முடிக்கையில், அதே வேலையை உலகில் உள்ள மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர் கொண்டு முடிக்க ஆகும் காலம் எவ்வளவு தெரியுமா 10 செப்டில்லியன் (Septillion) ஆண்டுகள் அதாவது 10 போட்டு அதன் பின்னர் 24 பூஜ்யங்களை சேர்த்து ஆகின்ற காலம். கணக்கிடவே முடியவில்லை தானே. பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு வேகம் என்பதை. 


திரு. சுந்தர் பிச்சை அவர்களின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கனிணி உலகின் முடிசூடா மன்னன் எலான் மஸ்க் தனது X பக்கத்தில் Willow சிப்பைப் பாராட்டி ‘WOW’ என்று ஒரு பதிவை தனது ட்விட்டரில் வெளியிட்டார். இதற்கு பதிலளித்த திரு. சுந்தர் பிச்சை, இந்த தொழில்நுட்பம் எலான் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு உதவலாம் என்றும் தெரிவித்தார்.

வில்லோ சிப்பின் வெளியீடு, கணினி தொழில்நுட்பத்தில் ஒரு புது யுகத்தைத் தொடங்கி வைத்துள்ளது. மருத்துவம் மற்றும் புதிய மருந்துகள் கண்டுபிடிப்புகள், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள், வானிலை போன்ற பல துறைகளில் Quantum Computersகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். க்ரிப்டோ கரன்சி போன்ற பிளாக் செயின் கட்டமைப்புகளுக்கு உதவியாக இருக்கும். 


மிகப்பெரிய அளவிலான inputகளை மிக விரைவாக புரிந்து கொண்டு அதனை செயல்படுத்தும் திறன் கொண்டவை இந்த குவாண்டம் கணினிகள். இதை வைத்து என்ன என்ன செயல்கள் செய்யலாம் என்று ஆராய்ச்சிகள் செய்ய ஆரம்பித்து விட்டனர் நம் விஞ்ஞானிகள். 

குவாண்டம் கணினிகள், நாம் வாழும் உலகை முற்றிலும் மாற்றி அமைக்கும் திறன் கொண்டவை. இந்த தொழில்நுட்பம், பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். ஆனால், இந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நல்லவர்கள் கையில் இருக்கும் வரை நல்லதுதான். நமது இந்தியாவும் இந்த குவாண்டம் டெக்னாலஜி குறித்து ஆராய்ச்சிகள் செய்தவண்ணம் உள்ளனர்.

-S.B.

Post a Comment

Previous Post Next Post