எம்..ஜி.ஆர்., அப்போது முதல்வராகி விட்டார். "சினிமா எக்ஸ்பிரஸ்' என்ற பத்திரிகையின் தொடக்க விழா நிகழ்ச்சி, எம்.ஜி.ஆர்., சாண்டில்யன், நான் ஆகியோர் பேச்சாளர்கள். சாண்டில்யன் பேசிவிட்டு அமர்ந்து விட்டார். நான் பேசும் போது, எம்.ஜி.ஆரை நோக்கி, "நீங்கள் படங்களில் நடித்த காலத்தில், "தூங்காதே தம்பி தூங்காதே...' போன்ற பாடல்களைப் பாடி, ரசிகர்களுக்கு அறிவுறுத்தினீர்; நாங்களும் ரசித்தோம். இப்போது ரசிகர்களை விட்டு, விட்டு ஆட்சிக்குப் போய் விட்டீர்கள்...' என்றேன்.
எம்.ஜி.ஆர்., பேசும் போது, "மாதத்தில் பாதி நாட்கள் முதல்வர்; பாதி நாட்கள் நடிகராக மாற முடிவு செய்துள்ளேன்...' என்று அறிவித்தார்.
பத்திரிகையாளர்கள் எழுந்து சென்று, செய்தியைப் பத்திரிகைகளுக்கு போன் மூலம் தெரிவித்து விட்டனர். இந்த செய்தி, இரவு 11 மணிக்கு டில்லியை எட்டி விட்டது.
அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், உடனே, எம்.ஜி.ஆரை அழைத்து, "ஒரு மாநில முதல்வர், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால், அது மரபுக்கு ஒவ்வாது. நீங்கள் முதல்வராகவே இருங்கள். நடிக்க வேண்டும் என்று தீர்மானித்தால், தங்களுக்கு நம்பிக்கையான ஒருவரை முதல்வராக்கிவிட்டு, நீங்கள் நடிப்புக்கே போய் விடுங்கள். மாநில முதல்வர் என்ற பணிக்கு, சில மரபுகள் இருக்கிறது. அது கெட்டுப் போய்விடக் கூடாது...' என்று கூறி விட்டார்.
உடனே, எம்.ஜி.ஆர்., ஆபிசில் இருந்து எல்லா பத்திரிகைகளுக்கும், "அந்த செய்தியை வெளியிட வேண்டாம்...' என்று, தகவல்கள் போயின. அவ்வாறே செய்தி நிறுத்தப்பட்டது!
— இயக்குனர் முக்தா சீனிவாசன்
Post a Comment