புதுச்சேரியில் பாரதியார் வசித்து வந்த வீட்டுக்கு அருகிலேயே, பொன்னு முருகேசம் பிள்ளையின் வீடும் இருந்தது. அவர் வீட்டு மேல்மாடியில் இருந்த அறை ஒன்றில் தான், பாரதியார் எப்போதும் தங்கியிருப்பார். சில நாட்களில் இரவு நேரங்களிலும் அங்கேயே இருந்து விடுவார்.
பிள்ளை நல்ல உடற்கட்டு வாய்ந்தவர்; நாஸ்திகர்; பெரிய செல்வந்தரும் கூட. பாரதியாரின் கடவுள் பக்தியைக் கேலி பேசி, அவரோடு சொற்போர் புரிவதில், அவருக்கு அலாதி மகிழ்ச்சி.
பொன்னு முருகேசம் பிள்ளைக்கு, ராஜா பகதூர் என்றொரு மகன் இருந்தான். மேற்படிப்புக்காக, அவன் பாரிஸ் (பிரான்ஸ்) போயிருந்தான். படிப்பை முடித்துத் திரும்பும் போது, முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. புதுவை திரும்பும் மகனை வரவேற்பதற்காக, பெற்றோர் விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தனர்.
வீட்டை திருமண வீடு போல் அழகு படுத்தி, உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பியிருந்தனர். பாரதியாரும் குடும்பத்துடன் சென்றிருந்தார்.
முருகேசம் பிள்ளை மகனை ஆவலோடு எதிர்பார்த்திருந்த வேளையில், அவன் வந்த கப்பல், முதல் உலகப் போரில் எதிரிப் படைகளின் குண்டுகளால் தாக்கப்பட்டு, உடைந்து போய்விட்டதாகத் தந்தி வந்தது.
தந்தியைப் படித்த முருகேசம் பிள்ளை, "ராஜா... பகதூர்...' என்று அலறிக் கொண்டே, மயக்க மடைந்து தரையில் சாய்ந்தார்.
குடும்பத்தாரும், உறவினரும் பதறினர். தந்தி வாசகம் எல்லாரை யும் கதறி அழச் செய்தது. அக்கம் பக்கத்தினர் முருகேசம் பிள்ளைக்கு முதலுதவி செய்து, அவரை மயக்கம் தெளியச் செய்தனர். மயக்கம் தெளிந்த பின்பும் அவரது அழுகையும், ஓலமும், அலறலும் ஓயவே இல்லை.
யாருடைய ஆறுதல் மொழிகளையும், அவரது காதுகள் ஏற்பதாக இல்லை. ஒருவராலும் அவரைத் தேற்ற முடியவில்லை.
இந்திரஜித் இறந்தபோது, மண்டோதரி பாடிய கம்பராமாயணப் பாடல்களையும், தசரதன் புலம் பலையும், குலசேகராழ்வார் பாடிய, "ஆளை நீர் கரும்பன்னவன் தாலோ' என்ற பாடலையும், பாரதியார், உள்ளம் உருகப் பாடினார் .
பிள்ளையோ, "ராஜா பகதுர் வந்து விட்டானா?' என்று கேட்டுக் கொண்டே இருந்தார். சித்தப்பிரமை கொண்டவர் போலாகி, நாளாக ஆக எலும்பும், தோலுமாகி விட்டார்.
இனி, அவர் பிழைப்பது அரிது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. வீட்டை விட்டு வெளியில் வராத யோகி அரவிந்தரின் கையில், ஒரு பொய் தந்தியைக் கொடுத்து, பிள்ளைக்கு ஆறுதல் கூறும்படி சிலர் வேண்டினர்.
அரவிந்தர் அவ்வாறே தந்தியைக் காட்டி, அவர் மகன் தப்பிப் பிழைத்து விட்டதாகவும், ஒரு வாரத்தில் வந்து சேருவார் என்றும் கூறினார். ஆனால், முருகேசம் பிள்ளை அதை நம்பவில்லை.
ஒருவருக்கு ராஜா பகதூர் போல வேடம் அணிவித்து, அவரிடம் அழைத்துச் சென்று, மகன் வந்து விட்டதாகக் கூறினர். அதையும் நம்பாமல், புரண்டு படுத்த பிள்ளை, சற்று நேரத்தில் உயிர் நீத்தார்.
தந்தை இறந்த பின், 27ம் நாள் ராஜா பகதூர் உண்மையாகவே வந்து சேர்ந்தார். உடைந்த கப்பலின் கட்டை ஒன்றைப் பற்றி, ஒரு திட்டை அடைந்து, பிறகு வேறு கப்பல் ஏறி வந்ததாக அவர் கூறினார்.
முருகேசம் பிள்ளை, தம் மகனுக்காக தம் உயிரைக் கொடுத்ததாக சொல்லி வருந்தினார் பாரதியார். பிற்காலத்தில், இந்த ராஜா பகதூர் புதுவை சட்டசபைச் செயலராக இருந்து, 1951ல் காலமானார்.
— ஆர்.சி.சம்பத் எழுதிய, "பாரதியின் குருமார்களும், நண்பர்களும்' (என்.சி.பி.எச்., வெளியீடு)
Post a Comment