சிறு பிராயத்தில் நான் பாட்டு கற்க ஒரு ஆசிரியரை அமர்த்தினர். அவர், முதன் முதலாகக் கற்றுக் கொடுத்த உருப்படிகளை இந்தக் காலத்து சங்கீத வித்வான்கள் எவருமே சீந்துவதில்லை. அவை நாட்டுப் புறப்பாட்டுக்கு கீழானவை என்ற எண்ணம். உதாரணத்திற்கு ஒரு பாட்டின் பல்லவி,
குறத்தி ஒருத்தி - எங்கள்
ஊருக்கு வந்தாளே
அழகாய் அவளிடம் - பச்சை
குத்திக் கொண்டேனே...
எடுத்தவுடன் ஹார்மோனியத்தில் ச, ரி, க, ம பழகுவதும், அதற்கு மேல் சுலபமான இந்திப் பாட்டுக்கள் பாடுவதுமே, இந்த காலத்து வழக்கமாகி விட்டது. எங்கள் இசையறிவு வளர்ச்சிக்கு முன் நின்று பாடுபட்டவர், விளையாட்டாகவே எதையும் சிறுவர்களுக்குப் புகட்ட வேண்டும் என்ற கருத்து கொண்டவர். இந்தியை விட எங்கள் தாய்மொழியான வங்காளப் பாடல்களே, சுலபமாக மனதில் பதியும் என்ற உண்மையை உணர்ந்தவர். தாயார் பாடும் நாட்டுப்புறப்பாட்டுகளே குழந்தைகள் மனதைக் கவர்கின்றன. அவையே அவர்கள் முதன்முதலாகக் கற்கும் இலக்கியம். நானும் அவ்வாறே பாடினேன்.
சங்கீதத்தைக் கொலை பண்ணும் இந்த ஹார்மோனியம், நல்ல காலம் அந்த நாளில் வரவில்லை. தோள் மேல் தம்பூராவை சார்த்திக் கொண்டு, பாடப் பழகிக் கொண்டேன். என்னிடத்தில் ஒரு பெரிய குறை, மனம் ஒன்றி எதையும் நான் கற்பதில்லை. நான் மட்டும் ஊக்கமாக, இசை கலையைக் கற்றிருந்தால், இந்தக் காலத்துப் பாடகர்களை எல்லாம் தூக்கி அடித்திருப்பேன்.
அந்தக் காலத்தில் எல்லாவிதமான விருந்தாளி களுக்கும் எங்கள் வீடு திறந்து கிடக்கும். வருவோர் யார், எவர் என்று விசாரிப்பதே இல்லை. யாராவது வந்து விட்டால், அவர்களுக்குத் தங்க இடமும், நிறைவான சாப்பாடும் கிடைக்கும். அம்மாதிரி, முன்னே, பின்னே தெரியாத ஒரு விருந்தாளி, உறையில் இட்ட தம்பூராவை எடுத்துக் கொண்டு, மூட்டை முடிச்சுகளுடன் தாராளமாக உள்ளே வந்து, வீட்டின் முன் அறையில் உட்கார்ந்து கொண்டார்.
ஊர் பெயர் தெரியாத அந்தப் பாடகர், தம் இஷ்டம் போல் சில நாள் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார். காலையில் எழுந்து வெளியே வந்ததும், அவர் பாட்டைத் தான் கேட்பேன். அப்புறம் யாதுபட்டர் என்ற ஒரு பெரிய சங்கீத வித்வான் வந்து, எனக்கு பாட்டு கற்றுத்தர பாடு பட்டார். பாவம், அவர் எண்ணம் ஈடேறவில்லை. நடுவில் ஒரு தடை; அந்த சமயத்தில் எங்கள் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தான். "புலி அடிக்கிறவன்' என்று அவனுக்கு பெயர். ஒரு வங்காளி கூட நல்லா புலி அடிக்கிறான் என்றால், அந்தக் காலத்தில் ஆச்சரியமல்லவா?
எப்போதும் நான் அவன் இருக்கும் அறையிலேயே காலம் கழிப்பேன். ஒரு முறை பெரிய புலி ஒன்றின் கையில் அவன் சிக்கிக் கொண்டதை விவரித்தபோது, நாங்கள் எல்லாம் திகிலடைந்து போனோம். புலியை அடித்து, கொன்று போட்டானாம். மியூசியத்தில் வாயைப் பிளந்து கொண்டு இருக்கும் செத்த புலியைப் பார்த்து விட்டுத்தான் அவன், "அளந்திருக்க' வேண்டும். அப்போது, தெரியவில்லை; பின்னாளில் புரிந்தது. அந்த வீரபுருஷனுக்கு நாங்கள் அடிக்கடி வெற்றிலையும், புகையிலையும் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டேயிருப்போம். தொலைவிலிருந்து கானடா ராக ஆலாபனை என் செவியில் வந்து விழும். இதுதான் நான் பாட்டு கற்றுக் கொண்ட லட்சணம்!
— ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது...
Post a Comment