Translate

உயிருடன் இருக்கும் போதே தங்களது சொத்தை பிள்ளை களுக்கு எழுதிவைக்க வேண்டாம்

 பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எதைக் கொடுப்பதாக இருந்தாலும் நன்றாக யோசித்துப் பின்னர் கொடுங்கள் …..

தங்கள் பிள்ளைகளே தங்கள் உலகம் என நினைத்து, பாடுபட்டுச் சேர்த்த தங்கள் சொத்துகள் அனைத்தையும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு நிர்கதியாக நிற்கும் பெற்றோர் நம் நாட்டில் ஏராளம். 

வயது முதிர்ந்த பெற்றோர், தங்கள் சொத்துகளைப் பிள்ளைகளுக்குத் எழுதி வைக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வழக்கறிஞர் எஸ்.ஸ்ரீனிவாச ராகவன் விரிவான தகவல்களைத் தருகிறார்.\

“மூப்பின் காரணமாகத் தங்களது சொத்துகளை நிர்வாகம் செய்ய முடியாமல் போகும்போது, பெற்றோர் அவற்றை தங்கள் பிள்ளைகளது பேரில் எழுதிவைப்பது நடைமுறை. 

தங்கள் இறப்புக்குப் பிறகு சொத்து பிள்ளைகளுக்குச் செல்வதுபோன்று உயில் எழுதுவது ஒருவகை. 

அப்படி அல்லாமல், சொத்தை பிள்ளைகளுக்கு கிரயப் பத்திரமாக எழுதிவைக்க நினைத்தால் அதற்கான முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன் சார்ஜ் ஆகியவை அதிகமாக இருக்கும். மேலும், சொத்துகளை யார் பெற்றுக்கொள்கிறாரோ அவர்தான் இந்தக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

எனவே, இந்த செலவைக் குறைப்பதற்காக `இனாம் செட்டில்மென்ட்’ எனப்படும் தானப் பத்திரம் மூலமாக பிள்ளைகள் பெற் றோரின் சொத்துகளை தங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்கின்றனர். இந்த தானப் பத்திரமானது `நன்கொடைப் பத்திரம்’ அல்லது `கொடைப் பத்திரம்’ என்றும் குறிப் பிடப்படுகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கோ, கணவன் தன் மனைவிக்கோ, மனைவி தன் கணவனுக்கோ, சகோதர – சகோதரிகள் ஒருவருக்கு ஒருவரோ இப்படி தங்கள் சொத்துகளை தானமாக வழங்கலாம். சொத்தை ஒருவருக்கு கிரயம் செய்து கொடுப்பதற்கு ஆகும் செலவைவிட இதற் கான செலவு குறைவு.

பெற்றோர் தங்களது சொத்தை உயிலாக எழுதிவைத்தால், அவர்கள் இறந்த பிறகு தான் அந்தச் சொத்து பிள்ளைகளின் கைக்கு வரும். 

ஆனால், இந்த தானப் பத்திரம் மூலம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்துகளை எழுதிவைத்தால், அவர்கள் எழுதிக்கொடுத்த அடுத்த விநாடியே அது அமலுக்கு வந்துவிடும். இப்படி லட்சக்கணக்கான, கோடிக் கணக்கான மதிப்புகளை உடைய சொத்துகளை குறைந்த செலவில் பிள்ளைகள் தங்களுக்குக் கைமாற்றிக் கொள்ளமுடியும்’’ என்று உயில் – தானப் பத்திரத்துக்கான வித்தியாசத்தை விளக்கியவர், தானப் பத்திரம் எழுதிய பிறகு பிரச்னை வந்தால் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் கூறினார்.
ஆர்.டி.ஓ-விடம் செல்லுங்கள்!

“ஒருவர் தான் சாகும்வரை எத்தனை முறை வேண்டுமானாலும் உயிலை மாற்றி எழுதலாம். எடுத்துக்காட்டாக, ஒருவர் இரண்டாவதாக உயில் எழுதினால் அவரது முதல் உயில் தானாகவே ரத்து ஆகிவிடும். தனது சொத்தை மற்றொருவருக்கு விற்கும் போது (Sale deed) தனக்குச் சேரவேண்டிய பணம் வரவில்லையெனில் அந்தச் சொத்துப் பரிமாற்றத்தை கேன்சல் செய்யச் சொல்லி கோர்ட்டை நாடமுடியும். 

ஆனால், தானப் பத்திரத்தை ஒருவருக்கு எழுதிக் கொடுத்தால் எழுதிக் கொடுத்ததுதான். அதை ரத்து செய்ய முடியாது. அதையும் மீறி ரத்து செய்ய நினைத்தால், பெற்றோர் நீதி மன்றத்துக்குச் செல்ல வேண்டும்.
ஆனால், `சீனியர் சிட்டிசன்’ எனப்படும் 60 வயதைக் கடந்தவர்களின் நலனுக்கான ‘மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம்’ (Senior Citizen Welfare And Maintenance Act), செக்‌ஷன் 23 என்ற சிறப்புப் பிரிவின்படி, பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தானப் பத்திரம் மூலமாக சொத்துகளை எழுதிக் கொடுத்து, ஒருவேளை அதை திரும்பப்பெற நினைத்தால், அந்தத் தானப் பாத்திரத்தை கேன்சல் செய்யும் அதிகாரம் வருவாய் கோட்டாட்சியர் (Revenue Divisional Officer), அதாவது ஆர்டிஒ-க்கு உண்டு.

பெற்றோர் தாங்கள் கொடுத்த நன் கொடைப் பத்திரத்தை ரத்து செய்யச் சொல்லி ஆர்.டி.ஒ-க்கு மனு கொடுக்கலாம். அவரது விசாரணையில், தானப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட பிள்ளைகள் பெற்றோரை கவனிக்காமல், பராமரிக்காமல், மருத்துவச் செலவுகளுக்குப் பணம் கொடுக்காமல் விட்டிருப்பது அல்லது வீட்டை விட்டுத் துரத்தியிருப்பது தெரியவந்தால் ஆர்.டி.ஒ அந்த தானப் பத்திரத்தை ரத்து செய்யுமாறு சப்-ரெஜிஸ்ட்டருக்குப் பரிந்துரைப்பார். அவர் மூலமாக அந்த தானப் பத்திரம் ரத்தாகும். இந்தத் தீர்ப்புக்கு எதிராக கீழமை நீதிமன்றங்களில் அப்பீல் செய்ய முடியாது. உயர் நீதிமன்றத்தில்தான் ரிட் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இதில் முக்கியமான விஷயம், பிள்ளைகள் தங்களைப் பராமரிக்கத் தவறினால் அவர்களுக்கு வழங்கியிருக்கும் இந்த தானப் பத்திரம் ரத்து செய்யப்படும் என்ற கண்டிஷன் ஒன்றை பெற்றோர் அந்தப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தால் மட்டுமே, இந்தப் பத்திரத்தை ரத்து செய்ய முடியும் என்று இந்த செக்‌ஷன் 23 கூறுகிறது. 

எனவே, பெற்றோர் அதை தான பத்திரத்தில் குறிப்பிட வேண்டும் என்பது அழுத்தமாக நினைவில் இருக்கட்டும்’’ என்ற ஸ்ரீனிவாச ராகவன், தானப் பத்திரம் மூலமாக பிள்ளைகளுக்கு தங்கள் சொத்துகளை கொடுக்க நினைக்கும் பெற்றோருக்கு நீதித்துறையும் சமூகமும் எவ்வகையில் உதவலாம் என்ற தன் கருத்துகளைப் பகிர்ந்தார்.
 
கீழே –
‘`60 வயதுக்கு மேலுள்ள சீனியர் சிட்டிசன்கள் தானப் பத்திரம் கொடுக்க பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு வரும்போது, ‘தன்னை மகனோ, மகளோ பராமரிக்கத் தவறினால் இப்பத்திரம் ரத்து செய்யப்படும்’ என்ற வார்த்தைகள் பத்திரத்தில் இருந்தால் மட்டுமே தானப் பத்திரம் பதிவு செய்யப்படவேண்டும் என்ற அறிவுறுத்தலை சப் ரெஜிஸ்ட்ரருக்குக் கொடுக்கலாம். 

வெளிப்படையாக எழுதப்படாவிட்டாலும் அந்த உட்கருத்து அப்பத்திரத்தில் மறைமுகமாக அடங்கியுள்ளது (Either expressed or implied) என்பதைச் சொல்லும் விதமாக, மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் செக்‌ஷன் 23-ல் திருத்தம் கொண்டு வந்தால், எந்த நோக்கத்துக்காக இந்தச் சட்டத்தைக் கொண்டுவரப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறும்.

ஆர்.டி.ஓ-வுக்கு ஆழமான சட்டப் பின்னணி இருக்காது என்பதால் அவருக்குப் பதிலாக ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு கன்ஸ்யூமர் கோர்ட்போல சிறப்பு நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்தி அவர்களிடம் தானப் பத்திரத்தை கேன்சல் செய்யும் அதிகாரத்தைக் கொடுக்கலாம்.

பெற்றோர் தானப் பத்திரத்தில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போடாமல், தன்னை மகனோ, மகளோ பராமரிக்கத் தவறினால் இப்பத்திரம் ரத்து செய்யப்படும் என்ற வார்த்தைகளைக் கட்டாயம் சேர்க்கச் சொல்லி பின்னர் கையெழுத்திடலாம்.

நீதித்துறையினர் இதுகுறித்த விழிப்புணர்வை 60 வயதைக் கடந்த பெற்றோரிடம் கொண்டுவர சமூக ஊடகங்கள், செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் வழியாக விளம்பரங்களை வெளி யிடலாம்; விழிப்பு உணர்வுப் பிரசாரங்களை மேற் கொள்ளலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக தாய், தந்தையை ஏமாற்றி சொத்துகளை அபகரித்து அவர் களை நட்டாற்றில் விடும் பிள்ளைகளிடம் கொடுக்கப்பட்ட தானப் பத்திரங்களை ரத்து செய்வதோடு, அவர்களுக்கு சிறைத்தண்டனையும் கொடுக்க வேண்டும்’’ என்றவர், பெற்றோருக்கு சில வார்த்தைகள் பகிர்ந்தார்.
‘`பெற்றோர், தாங்கள் உயிருடன் இருக்கும் போதே தங்களது சொத்தை பிள்ளை களுக்கு எழுதிவைக்க வேண்டாம் என்பது என் கருத்து. சொத்துகளை தானப் பத்திரமாக எழுதாமல் உயிலாக எழுதிப் பதிவு செய்யுங்கள்.

 உங்களுக்குப் பின்னர் தானாக அவர்களுக்குச் சென்றுவிடும். 
அதேபோல, கணவனோ, மனைவியோ உயில் எழுதும் போது, தன் இணையின் காலத்துக்குப் பிறகே தன்னுடைய சொத்துகள் பிள்ளை களுக்குப் போக வேண்டும் என்று மறக்காமல் குறிப்பிட வேண்டும். 

இல்லையெனில் உயில் எழுதியவரின் காலத்துக்குப் பிறகு அவரது இணை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

தங்கள் சம்பாத்தியம், சேமிப்பு, மேற்கொண்டு கடன் என்று எல்லா வகையிலும் பங்களித்துப் பிள்ளைகளை படிப்பு, வேலை, திருமணம் என்று ஆளாக்கிய பின்னரும், கையில் இருக்கும் சொத்தையும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு நிர்கதியாக நிற்பது வேண்டாம்’’ என்று வலியுறுத்துகிறார் வழக்கறிஞர் ஸ்ரீனிவாச ராகவன்….( வழக்கறிஞர் எஸ்.ஸ்ரீனிவாச ராகவன் அவர்களுக்கு நன்றியுடன்…..)

Courtesy : Vimarsanam 13.12.2024

Post a Comment

Previous Post Next Post