Translate

"அன்னக் காவடி, தர்மம் தாயே!'

காவடியைப் பார்க்காத தமிழர்கள் இருக்க மாட்டார்கள். இந்துக்களில் எல்லா வகுப் பினருமே, முருகன் கோவிலுக்குக் காவடி எடுப்பது உண்டு. முருகனுக்கு நேர்ந்து கொண்டவன், குறிப்பிட்ட ஒரு முருகன் கோவிலுக்குக் காவடி எடுத்துச் செல்வான். அவன் காவடியைத் தோளில் தூக்கி வைத்து, சாமியாடிக் கொண்டே, பல வீடுகளுக்கும், பல ஊர்களுக்கும் போய், வீட்டுக்கு அரை ரூபாய், ஒரு ரூபாய் என்று பண வசூல் செய்து, அந்தப் பணத்தையே செலவுக்கு வைத்துக் கொண்டு, சுற்றத்தார் புடைசூழக் கோவிலுக்குப் போவான். காவடி எடுப்பவனுக்குத் துணையாக, இடும்பன்சாமி என்று ஒருவன், ஆடிக்கொண்டே செல்வான். கோவிலுக்குப் போய், உரிய சம்பிரதாயப் படி காவடியை இறக்கி, சுவாமிக்குச் செய்ய வேண்டிய பூஜை முதலியவற்றை செய்து விட்டு ஊர் திரும்புவர். 

சாதாரணமாக, மயிலிறகு களால் அலங்கரிக்கப்பட்ட காவடிகளும், அக்னிக் காவடி களும், பாம்புக் காவடிகளும், செம்பு நிறையப் பால் நிரப்பித் தொங்க விடப்பட்ட பால் காவடிகளும், சந்தனம் கட்டித் தொங்கவிடப்பட்ட சந்தனக் காவடிகளும், ஜரிகைத் தாளால் அலங்கரிக்கப்பட்ட வர்ணக் காவடிகளுமாக, காவடிகளில் பலவகை உண்டு. சத்திரத்திலோ, மடத்திலோ உள்ள சில பண்டாரங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட பண்டாரம், மணியோசை எழுப்பிக் கொண்டே வந்து, "அன்னக் காவடி, தர்மம் தாயே!' என்று, சோறு கேட்டு வாங்கிச் செல்வது உண்டு. 

இந்த காவடியைத்தான் பாரதியார், "எண்ணும் முன்னே அன்னக் காவடி பிச்சை என்றேகிடுவான் குரலும்...' என்று தம் கவிதையொன்றில் குறிப்பிடுகிறார். யாதொரு, "ஐவேஜியும்' இல்லாதவனை, "வெறும் காவடி' என்றும், "அன்னக் காவடி' என்றும் இழித்துக் கூறுவார். இழித்துக் கூறும் இந்தச் சொற்கள், காவடி எடுப்பதையொட்டி எழுந்தவையே. 

காவடி எடுத்து வருகிறவர் களுக்கு, அயலூர்களிலுள்ள முன்பின் தெரியாத வர்கள் கூடப் பணம் கொடுப்பது உண்டு. ஆனால், நாளடைவில் பலர் ஜீவனோபாயத்தை மட்டும் உத்தேசித்து, நினைத்த போதெல்லாம் காவடி தூக்குவது என்று ஆரம்பித்து விடவே, இப்போது உண்மைக் காவடிகளுக்குக் கூட பணம் வசூலாவது அரிதிலும் அரிதாகி விட்டது. 

— கு.அழகிரிசாமி ஒரு கட்டுரையில்



Post a Comment

Previous Post Next Post