ராணுவத்தில், அவரவர்கள் சுவைக்கு ஏற்ப, ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக உணவு சமைக்க முடியாது. நூறு முதல், ஆயிரம் பேர் வரையிலான ஒவ்வொரு முகாம்களிலும், அத்தனை பேருக்கும், ஒரே வகை, ஒரே சுவை, ஒரே அளவிலான உணவு முறைதான். காலை எழுந்தவுடன், நான்கு மணிக்கெல்லாம் சூடான தேனீர். காலை ஏழரை மணி அளவில் சிற்றுண்டி, மதியம் ஒரு மணியளவில் பகல் உணவு. மாலை நான்கு மணியளவில் தேனீர். இரவு எட்டு மணிக்கு உணவு. இதுதான் தினசரி வழங்கப்படும் உணவு முறை.
தினசரி உணவுக்காக வழங்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும், ஒரு அளவு உண்டு. ஒரு நபருக்கு, ஒரு நாள் உணவுக்காக வழங்கப்படும் பொருட்கள்:
அரிசி - 420 கிராம், கோதுமை மாவு - 210 கிராம், பருப்பு - 90 கிராம், சர்க்கரை - 90 கிராம், வனஸ்பதி - 60 கிராம், தேயிலை - 8 கிராம், காய்கறி - 250 கிராம், உருளைக்கிழங்கு - 100 கிராம், வெங்காயம் - 60 கிராம், ஆட்டுக்கறி - 100 கிராம் அல்லது கோழிக்கறி - 60 கிராம், பால் - 200 மி.லி., பழம் - 100 கிராம் என்ற அளவில் வழங்கப்படுகிறது.
ஒரு முகாமில் நூறு வீரர்கள் இருந்தால், மேற்கூறிய ஒரு நபருக்கான உணவுப் பொருட்களின் அளவு போல், நூறு நபர்களுக்கான உணவுப் பொருட்களை எடுத்து, அன்றைய சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்வர்.
ஒரு முகாமில், குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்குண்டான உணவுப் பொருட்கள் எப்போதும் கைவசம் இருக்கும். ராணுவ முகாம்களுக்கு இந்த உணவுப் பொருட்களை வழங்குவதற்காக, ஒரு பகுதியில் அமைந்துள்ள அனைத்து முகாம்களுக்கும் என, ஒரு இடத்தில் ஆர்மி சப்ளை டெப்போ அமைந்திருக்கும்.
ஒரு வீரர், தினசரி நூறு கிராம் அளவிலான மாமிசம் உண்டாலும், சமைத்துப் பரிமாறுவதில், சில சிக்கல்கள் உண்டு. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இருநூறு கிராம் என்ற கணக்கில், (நூறு பேர் இருந்தால்) இருபது கிலோவாக வாங்கி, சமைத்துப் பரிமாறுவர். இதன்படி, ஒருநாள் விட்டு ஒரு நாள், அசைவம் பரிமாறப்படும்.
ராணுவ முகாம்களுக்குள், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவைகளுக்கு இடமில்லை. மாடு, பன்றி போன்றவைகளின் இறைச்சியை, ராணுவ முகாம்களுக்குள் எடுத்து வருவதே, கடுமையான தண்டனைக்குரிய குற்றம்.
எல்லைப் பகுதிகளில் தனித்தனிக் குழுக்களாகக் செல்லும் போது, ரொட்டி, பூரி, பட்டர், ஜாம், இப்படி எதையாவது மூட்டை கட்டி, தோளில் மாட்டிக் கொண்டு போய், வாரக் கணக்கில் அதையே சாப்பிட வேண்டி வரும். சமயத்தில், அதுவும் தீர்ந்து போய், ஒரு சில நாட்கள் பட்டினி கிடக்கவும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
Post a Comment