Translate

50. "என்று தணியும் இந்த சுகந்திர தாகம்...'

என்னுடைய தேசாபிமான எண்ணங்கள் உருவாவதற்கு மிகவும் உதவியாக இருந்தவர், என் நண்பர் நாகராஜ ஐயங்கார். நாமக்கல்லில் இருந்து இவர், சென்னை சென்று வக்கீலுக்குப் படித்தார்.

அப்போது சென்னை மூர்மார்க்கெட்டில் அடிக்கடி நடக்கும் பாரதி பிரசங்கங்களுக்கு இவர் போவார். அந்தக் காலத்தில், மூர்மார்க்கெட்டில் இப்போது உள்ளது போலக் கட்டடங்கள் இல்லை. பெரும் பகுதியும், புழுதி படிந்த பொட்டலாக இருக்கும். பாரதியாருடைய சுதந்திரப் பிரசங்கங்கள் அங்கேதான் நடக்கும்; மக்கள் திரளாகக் கூடுவர்.

விடுதலை வேட்கைமிக்க அநேக புதுப் புதுப் பாடல்களை, பாரதியார் இந்த மூர்மார்க்கெட் பிரசங்களிலேதான் அரங்கேற்றினார். அவர் சென்னையை விட்டு, புதுச்சேரிக்குள் புகுந்து கொள்வதற்கு, சில காலத்துக்கு முன்புதான், ஒரு நாள் மூர்மார்க்கெட் பிரசங்கத்தில், "என்று தணியும் இந்த சுதந்திரம் தாகம்...' என்ற பாடலை முதன்முதலாகப் பாடி, மிக்க ஆவேசத்துடன் பிரசங்கம் செய்தார். அந்தக் கூட்டத்துக்கு, நாகராஜ ஐயங்கார் போயிருந்தார்.
பாரதியார் பாடிய அந்தப் பாட்டின் சில முக்கியமான அடிகளை, அப்படியே நாகராஜ ஐயங்காரும், மற்ற மாணவர்களும் எழுதி, பாடம் பண்ணிக் கொண்டனர்.

அந்தப் பிரசங்கத்துக்கு சில நாட்களுக்குப் பின், நாமக்கல்லுக்கு வந்த நாகராஜ ஐயங்கார், எங்களை எல்லாம் கூட்டி வைத்து, பாரதியாரின் புதுப்பாட்டைப் பற்றியும், அதிலுள்ள சில குறிப்பிடத்தக்க சொற்றொடர்களையும் சொல்லி, புகழ்ந்து கொண்டிருந்தார். அவர் கடைசியாக மூர்மார்க்கெட்டில் பாடிய, "என்று தணியுமிந்த சுதந்திர தாகம்...' என்ற பாட்டும், அன்று அவர் பேசிய பேச்சும், இளைஞர்களுக்கு சுதந்திர ஆவேசத்தை ஊட்டக் கூடியவை. அவர் அன்று பாடியதாக, நாகராஜ ஐயங்கார் எழுதிக் கொண்டு வந்து எங்களுக்கெல்லாம் சொன்ன பாட்டுக்களின் சில முக்கியமான பகுதிகளை, இப்போது வெளியாகி விற்பனைக்கு வரும் புத்தகங்களில் காண முடியாது. அந்தச் சில அடிகள், மிகவும் உத்வேகம் உள்ளவைகளாகக் கருதப்பட்டு, அப்போதே அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர், பாரதியார் பாடல்களை அச்சிட்டவர்கள், அந்தக் குறிப்பிட்ட சொற்றொடர்களை உடைய சில அடிகளை அடியோடு விட்டு விட்டும், புள்ளிகளை வைத்தும், வேறு சில இடங்களில் இடைச் செருகல் செய்தும், அச்சிட்டு விற்கலாயினர். நாளடைவில், விடுபட்ட வரிகளுக்காகப் புள்ளிகள் வைத்து அச்சிடுவதும் போய்விட்டது. மாற்றப்பட்ட பாட்டுகளும் மறைந்து விட்டன. இப்போது கிடைப்பது, இடைச் செருகலோடு கூடிய பாட்டுக்கள் தாம்! நாகராஜ ஐயங்கார் எழுதிக் கொண்டு வந்து, எங்களுக்குச் சொன்ன பாட்டிற்கும், இப்போது புத்தகத்தில் படிக்கிற, "என்று தணியும் இந்த சுகந்திர தாகம்...'  பாட்டிற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கின்றன.

— "என் கதை' நூலிலிருந்து  நாமக்கல் கவிஞர்  ராமலிங்கம் பிள்ளை.

Post a Comment

Previous Post Next Post