சங்கத்தமிழ் பழமொழி நானூறு
29. வல்லவன் காரியம் கெடாது
29. வல்லவன் காரியம் கெடாது
நெடுங்காலமாக நீர் வற்றாது நிறைந்திருக்கின்ற ஒரு குளமானது ஒருவர் சற்றே நீர் எடுத்துச் சென்றதனால், நீரற்றுப் போய்விடாது. அதுபோலவே, பல ஆண்டுகளாக வந்து சேர்ந்ததாகிய, பயனில்லாமல் சேர்ந்து கிடந்த செல்வத்தையும், கொடுத்தலிலே வல்லமை உடையவனான ஒருவன், கொடுக்கும் தகுதியினைத் தெரிந்து, தகுதியுடையவருக்கு வழங்கும் காலத்திலே, அதனால் வரும் ஆக்கமும் விரைவிலே நீங்காது நீடித்து நிற்கும்; அச்செல்வமும் குறைந்து அழிந்து போய்விடாது; மென்மேலும் பெருகவே செய்யும்.\
பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
வல்லான் தெரிந்து வழங்குங்கால், - வல்லே
வலிநெடிது கொண்ட(து) அறாஅது; அறுமோ,
'குளநெடிது கொண்டது நீர்?'.
'செல்வத்தின் பயனே தக்கவர்க்கு ஈதல்'. அதனால், அவர் செல்வமும் குறையாது. 'அறுமோ குளநெடிது கொண்டது நீர்' என்பது பழமொழி.
Post a Comment