Translate

40. "காந்தி ஐயர்' ஓட்டல்

 சேலத்தில், "காந்தி ஐயர்' ஓட்டல் பெயர் பெற்றது. அந்த ஓட்டலின் சொந்தக்காரர் இயற்பெயர் எனக்குத் தெரியாது. பொது ஜனங்கள் அவரை காந்தி ஐயர் என்று தான் அழைக்கின்றனர். அரிஜன இயக்கம் தமிழகத்தில் தலையெடுத்த காலத்தில் சேலம் காந்தி ஐயரும் அதில் ஈடுபட்டார்.

தம் ஓட்டலில் அரிஜனங்கள் நுழையவும், மற்ற ஜாதி இந்துக்களுடன் இருந்து உணவு உண்ணவும் அனுமதி கொடுத்தார். இதன் பயனை ஒரு வாரத்திற்குள் அனுபவித்தார். அவர் ஓட்டலுக்கு யாரும் சாப்பிடப் வருவதில்லை. ஓட்டலுக்கு யாரும் சாப்பிட வராவிட்டால், ஓட்டல்காரர் கதி என்னவாகும்? காந்தி ஐயர் ஓட்டாண்டி ஆகிவிட்டார். இருப்பினும், மகாத்மாவின் மேல் பாரத்தைப் போட்டு, தாம் பிடித்த விரதத்தை விடாது கடைபிடித்து வந்தார். பதினைந்து நாட்கள் ஆயின. ஒருவர் இருவராக மெல்ல மெல்ல ஜாதி இந்துக்கள் திரும்பி வர ஆரம்பித்தனர்.

 மாதம் ஒன்றாயிற்று. போன பேர்வழிகளில் பாதிப் பேர் திரும்பி விட்டனர். இரண்டாவது மாதத்தில், எல்லாரும் திரும்பி விட்டனர். மூன்றாவது மாதத்தில், காந்தி ஐயர் ஓட்டல் கியாதி அடைந்து விட்டது. நஷ்டமடைந்த பணம் வட்டியும், முதலுமாகத் திரும்பிவிட்டது.

சேலம் நகர சபையினர், தங்கள் எல்லைக்குள் எந்த சாப்பாட்டு இடம் இருந்த போதிலும், அதனுள் எல்லா ஜாதியாரும் சமமாகப் புகும் உரிமை வேண்டுமென்ற நியாயத்தை வற்புறுத்த வேண்டுமெனத் தீர்மானம்  செய்தனர். பொது ஜனங்களுக்கு சாப்பாடு, பலகாரம் முதலியவை அளிக்கும் இடங்களில், ஒரு ஜாதியாரை மட்டும் வராமல் தடை செய்யும் ஓட்டல்களுக்கு லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று, தீர்மானம் நிறைவேற்றி, சென்னை சர்க்கார் அனுமதிக்கு அனுப்பினர். சென்னை சர்க்கார் அதற்கு அனுமதி கொடுக்க மறுத்தனர். ஆனால், நகரசபையார், சென்னை சர்க்கார் இருவரையும் காந்தி ஐயர் வென்று விட்டார்.

—"தமிழ்நாட்டில் காந்தி'   நூலிலிருந்து... 

பிடித்தது -40

இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.


Post a Comment

Previous Post Next Post