டில்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் இந்திய தேசியக்கொடி, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தான் தயாரிக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், உண்மை அதுதான். காங்கிரஸ் பாரம்பரியமும், தேசிய உணர்வும் இந்த குடியாத்தம் மண்ணுக்கு எப்போதும் உண்டு. 1932ல் இருந்து தொடர்ந்து 10 ஆண்டுகள், குடியாத்தம் நகராட்சி தலைவராக பிச்சனூர் கோட்டா ஆர்.வெங்கடாசல செட்டியார் இருந்தார். வியாபார விஷயமாக அவர் பாம்பே செல்ல நேர்ந்தது.
அப்போது, பிளாட்பாரத்தில் விற்கப்பட்ட ,"ஸ்கிரீன் பிரின்டிங்' என்ற புத்தகத்தை, எதேச்சையாக அவர் வாங்கிப் படித்தார். அந்த புத்தகம் தான் பின்னாளில் இந்துஸ்தான் பேப்ரிக்ஸ் என்ற நிறுவனத்தை அவர் தொடங்க காரணமாகவும் இருந்தது.சுதந்திர இந்தியா என்ற கனவு உறுதி செய்யப்பட்டதும், இந்தி ய தேசியக்கொடி எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. செங்கோட்டையில் ஏற்றுவதற்கான கொடியை தயார் செய்ய, அந்தக் காலத்தில் கைத்தறியில் புகழ்பெற்ற நகரான குடியாத்தத்துக்கு மத்திய அரசு செயலர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டார். வெங்கடாசல செட்டியார் மூலம் குடியாத்தத்தில் இரண்டு நாள் தங்கியிருந்த அரசு செயலர், 12 அடி அகலம், 18 அடி நீளம் கொண்ட மூன்று தேசியக் கொடிகளைத் தயார் செய்து, அதை டில்லிக்கு எடுத்துச் சென்றார். அந்த கொடியை பார்த்த மகாத்மா காந்தி, திருப்தி தெரிவித்தார். குடியாத்தத்தில் கைத்தறியில் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி, டில்லி செங்கோட்டையில் ஆக., 15, 1947ல் ஏற்றப்பட்டது.— வீரபூமி ஜனவரி 2008 இதழிலிருந்து....
தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -23
இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
Post a Comment