Translate

1.அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல்

சங்கத்தமிழ் பழமொழி நானூறு

வேறு எந்த மொழிக்கும் இல்லாத தனி சிறப்பு அதன் பால் ஏராளமான நீதி நூல்கள் அடங்கியிருப்பது தான். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழி நானூறு என்பது முக்கியமான தொன்றாகும். ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி ஒளிந்து நின்று நமக்கு அறிவுரையை புகட்டும். தினந்தோறும் காலை நல்ல சிந்தனையுடன் நாட்களை துவக்க பழமொழி நானூறில் ஒவ்வொரு பாடலை நாள்தோறும் பார்த்தால் நலன் பயக்கும் என்பதனால் நம்முடைய வலைத்தளத்தில் தொடர்ந்து இதனை பதிவிட முடிவு செய்துள்ளோம். பாடலின் பொருளதனை பெரும் புலவர் புலியூர் கேசிகன் அவர்கள் உரையில் மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்பு திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலில் இருந்து இனி நாள்தோறும் ஒரு பழமொழியினை பார்ப்போமா. மனதிற்கு இதமளிக்கும். மற்றும் நாள்தோறும் நமக்கு ஒரு செய்தியும் சொல்லும்.

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி நானூறு

சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது. இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு ஆகும். இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன.

நம் முன்னோர்களின் வாழ்விலே பூத்துக் காய்த்துக் கனிந்த அனுபவ வாக்குகளே பழமொழிகள். அந்த வாக்குகளை உளங்கொண்டு, நடத்தைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் போது, அப்படிக் கொள்பவரின் வாழ்வு வளமாகின்றது. பழமொழிகளைக் கற்கும் போது, நினைவிற் கொள்ள வேண்டிய ஓர் உண்மை இதுவாகும்.

ஒவ்வொரு பழமொழியையும் சொல்லி, அதன் அடிப்படையில் ஒரு நீதியையும் விளக்கும் ஒவ்வொரு செய்யுளாக, மொத்தம் நானூறு செய்யுட்களால் அமைந்துள்ளது பழமொழி நானூறு.

முதலிரண்டு அடிகளில் தாம் சொல்லக் கருதுகின்ற உண்மையை அமைத்தும், செய்யுளின் இறுதியில் அதற்கேற்றதும் அவ்வுண்மையை வலியுறுத்துவதுமான பழமொழியை அமைத்தும், இந்நூற் செய்யுட்களை இவர் அமைத்துள்ளார். ஒரு சில செய்யுட்களில் மட்டுமே இரண்டு பழமொழிகளைச் சேர்த்துள்ளார்.

'நானூறு' என்னும் தொகையமைப்பு புறநானூறு, அகநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு என்னும் தொகை நூல்களுள் நிலவும், நானூறு செய்யுட்கள் என்னும் தொகுப்பு மரபைத் தழுவியதாகும்.

முதன் முதலாக, இந்தப் பழமொழி நானூறை அச்சேற்றி வெளியிட்டவர்கள் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் அவர்களாவர் (1874). இதனையடுத்து நி.சு. ஆறுமுக நயினார் அவர்களின் பதிப்பு வெளிவந்தது (1954). இதனையடுத்துக் கி.பி. 1914இல் திருமணம் செல்வக் கேசவராய முதலியார் அவர்களின் பதிப்பு வெளிவந்தது. ஏட்டுப் பிரதிகளில் கண்ட வரிசையை மாற்றாமல் வெளியிட்ட ஆறுமுக நயினார் அவர்களின் பதிப்பும், திருநாராயண அய்யங்கார் அவர்களின் (200 பாடல்கள் மட்டும்) பதிப்பும் (கி.பி. 1918-1922) இந் நூலின் செழுமையைத் தமிழ் அன்பர்களிடம் பரப்பின.

வாழ்க தமிழ்! வளர்க தமிழார்வம்! புலியூர்க் கேசிகன்

தற்சிறப்புப் பாயிரம்

அசோக மரத்தின் நீழலிலே அமர்ந்து, அந்நாளிலே அறம் உரைத்த பெருமான் அருகதேவன். அவன் திருவடிகளைப் பணிந்து, தொன்மையான பழமொழிகளுள் நானூறு மட்டும் எடுத்துக் கொண்டு, நான்கு அடிகளையும் இனிமையாகச் செய்து முன்றுறை அரையன், உலகிற்கு உபகாரமாக இந்த நூலை அமைத்தனன். இனிய பொருள் துறைகள் செறிந்த வெண்பாக்கள் இவை நானூறும் ஆகும்.

நூல்

2. மேல்நிலை அடைதல்

மணல் மேடுகளிலே விளங்கும் அடும்பின் கொடிகளிலே, பூக்கள் மலிந்திருக்கும் கடற்கரை நாட்டிற்கு உரியவனே! மிகுதியான பழிச் செயல்களை ஒருவன் அதிகமாகச் செய்து விட்டால், மீண்டும் அந்தப் பழியைப் போக்கிக் கொள்ளத்தக்க வழிகளையும் அவன் அறிந்திருக்க வேண்டும். அப்படி அறியாதவன் மேல் நிலையடைதல் என்பது ஒரு போதும் நடவாததாகும். 'அகலினுள் உள்ள நீரிலே நீர் துளும்பக் குளித்துத் தூய்மை யாவேன்' என்பது போல, அது ஒரு போதும் நடக்க முடியாததேயாகும்.

மிக்க பழிபெரிதும் செய்தக்கால், மீட்டதற்குத்

தக்கது அறியார், தலைசிறத்தல், - எக்கர்

அடும்பு அலரும் சேரப்ப! 'அகலுள்நீ ராலே

துடும்பல் எறிந்து விடல்'.

 பழியொடுபட்ட வாழ்வு பயனற்ற வாழ்வு. 'அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல்' என்பது பழமொழி. துடும்பல் எறிதல் - நீர் துளம்பி விழக் குதித்து நீராடல்.






Post a Comment

Previous Post Next Post