இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
மாவீரன் நெப்போலியன், எகிப்திலிருந்து திப்பு சுல்தானுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். "செங்கடலின் எல்லைக்கு நான் வந்திருக்கும் விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இங்கிலாந்தின் இரும்புப் பிடியிலிருந்து, உங்களை விடுவிக்கும் மன உறுதியுடன், எவராலும் வெல்ல முடியாத பெரும் படையுடன் வந்திருக்கிறேன்...' என்று, நெப்போலியன் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்தைக் கொண்டு வந்த தூதன், ஆங்கிலேயே ஒற்றர்களிடம் அகப்பட்டுக் கொண்டதால், கடிதம் திப்புவிடம் வந்து சேரவில்லை. இத்தகைய கடிதம் ஒன்றை, நெப்போலியன் எழுதியிருக்கிறார் என்ற சேதியே, அவருக்குத் தெரியாது. ஆங்கிலேயர், திப்புவின் மீது போர் தொடுப்பதற்கு, இதுவும் ஒரு காரணமாயிற்று. உண்மையில், ஆங்கிலேயர்களுக்கு இந்தக் கடிதம் ஒரு, "சாக்குபோக்கு' தான். இந்தியாவை, "முழுங்குவது' தானே அவர்கள் நோக்கம்!
ஆப்கானிஸ்தானில், ஜமான்ஷா ஆட்சியில் இருந்தார். திப்புவுடன் நட்புறவாக இருந்தார். இந்திய மொகலாய சக்கரவர்த்தி குடும்பத்துடன், திருமண உறவும் வைத்திருந்தார். எனவே, திப்புவுக்கு ஆதரவாக இந்தியா மீது படையெடுத்தார். அவரது படைகள், லாகூருக்கு வந்து விட்டன. ஆங்கிலேயர் ஒரு சூழ்ச்சி செய்தனர்.
ஆப்கானியர், "சன்னி' பிரிவு முஸ்ஸிம்கள், பக்கத்து நாடான பாரசீகத்தினர், "ஷியா' பிரிவு முஸ்ஸிம்கள் இருவருக்கும் எப்போதும் பகையும், மோதலும் உண்டு. ஆப்கன் படைகள் இந்தியா மீது படையெடுத்து வந்து விட்டதால், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பாரசீக மன்னர் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, அதைக் கைப்பற்றும் முயற்சியில் இருப்பதாக, வதந்தியைக் கிளப்பி விட்டனர் ஆங்கிலேயர்கள். விளைவு... தன் நாட்டைச் காப்பாற்றிக் கொள்ள வேண்டி, ஜமான்ஷா, லாகூரிலிருந்து பின் வாங்கி ஓடினார். ஆங்கிலேயரின் ராஜதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றி இது!
Post a Comment