தென்னிந்திய சினிமா வரலாற்றில், முதல் இருபது ஆண்டுகளில் வர்த்தக ரீதியாக ஒரு படமும் தயாரிக்கப்படவில்லை. இன்று விரிந்து, பரந்து வளர்ந்துவிட்ட இந்த சினிமாத் துறையை - தயாரிப்பு, விநியோகம், காட்சிப்படுத்துதல் என்று பிரித்தால், காட்சிப்படுத்துதல் மட்டுமே முதல் இருபது ஆண்டுகளில் வளர்ந்தது எனலாம். மற்ற இரு அம்சங்களும் அப்போது ஆரம்பமாகவில்லை.
சென்னை மவுண்ட் ரோடில் ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்த வெங்கையா என்பவரை, வேகமாகப் பரவி வந்த சலனப் படத்துறை ஈர்த்தது.
சென்னையில் இரண்டு நிரந்தரக் கொட்டகைகளும், பல டூரிங் சினிமாக்களும் வெற்றிகரமாக சலனப் படங்களைத் திரையிட்டுக் கொண்டிருந்தன. இவரும் ஒரு குரோனா மெகபோன் (கிராமபோன் ஒன்றுடன் இணைக்கப்பட்ட புரொஜக்டர்) ஒன்றை வாங்கி, விக்டோரியா பப்ளிக் ஹாலில் படங்களைத் திரையிட ஆரம்பித்தார். அவை, 500 அடி நீளமே கொண்ட அமெரிக்கத் துண்டுப் படங்களே. படம் திரையில் விழ ஆரம்பித்ததும் ரெகார்டு சுழல ஆரம்பித்து, ஒலி பிறக்கும், படங்கள் பேசுவது போன்ற பிரமை ஏற்படும்.வசூல் நன்றாகவே ஆனது. பிறகு இவர் இலங்கைக்கும், பர்மாவிற்கும் சென்று, படங்களைத் திரையிட்டார். கணிசமான தொகையுடன் திரும்பிய வெங்கையா, ஒரு நிரந்தரக் கொட்டகையைக் கட்டி சென்னையிலேயே தங்க முடிவு செய்தார்.
மவுண்ட் ரோடில், 1913ல், ‘கெயிட்டி' தியேட்டரைக் கட்டினார். முதன் முதலாக இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட இந்தத் திரையரங்கு தான் கடைசி வரை தியேட்டர்களில் எல்லாம் மூத்தது. அது மட்டுமல்ல, முதலில் வைத்த பெயரே நிலைத்திருந்தது.
— தியோடர் பாஸ்கரனின், ‘தமிழ் சினிமா வளர்ந்த கதை’ நூலிலிருந்து...
No comments:
Post a Comment